மீண்டும் ஸ்மித் தலைமை தாங்குவார்: முன்னாள் அணித்தலைவர் நம்பிக்கை!

Saturday, September 14th, 2019


அவுஸ்திரேலிய அணியை மீண்டும் ஸ்டீவன் ஸ்மித் வழிநடத்துவார் என்று முன்னாள் அணித்தலைவர் மார்க் டெய்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித், தனது அணித்தலைவர் பதவியை இழந்தார். அத்துடன் ஓராண்டு தடையை அனுபவித்தார்.

அதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் தடைக்காலம் முடிந்து அணிக்கு திரும்பினார். ஆனால், ஓராண்டு காலம் அவருக்கு எந்த போட்டிகளிலும் அணித்தலைவர் பதவி வழங்கப்படாது என்று ஏற்கனவே அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.

எனவே, ஸ்டீவன் ஸ்மித் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தான் மீண்டும் அணித்தலைவர் ஆக முடியும். இந்நிலையில், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் மார்க் டெய்லர், அவுஸ்திரேலிய அணியின் தலைவராக ஸ்மித் மீண்டும் வருவார் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ‘ஸ்டீவன் ஸ்மித் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக மீண்டும் வருவார் என்று நம்புகிறேன். பந்தை சேதப்படுத்திய பிரச்னையில் அவருக்கும், டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோருக்கும் தண்டனை வழங்கப்பட்டபோது, நானும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் தான் இருந்தேன்.

தடை காலத்தில் அவர் கடுமையான பாடம் கற்றுக்கொண்டு இருப்பார். அதனால் அடுத்த முறை அவர் சிறந்த தலைவராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. தற்போது டெஸ்ட் அணியின் தலைவராக டிம் பெய்ன் இருக்கிறார்.

அவரது பதவி காலம் முடிந்த பிறகே இது பற்றி சிந்திக்க விரும்புகிறேன். அது அடுத்த 6 மாதத்திலேயோ, 2 அல்லது 3 ஆண்டுகள் கழித்தோ கூட இருக்கலாம். ஆனால் ஸ்மித் மீண்டும் அணியை வழி நடத்த தகுதியானவராக இருப்பார்’ என தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று ஆஷஸ் தொடரில் ஸ்டீவன் ஸ்மித், இரட்டை சதம் உட்பட 671 ஓட்டங்கள் குவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: