முன் அறிவித்தல் ஏதும் இன்றி உதைபந்தாட்ட போட்டிக்குத் தடை: பெற்றோர் குற்றம் சாட்டு!

Tuesday, February 20th, 2018

மாணவர்கள், பெற்றோர் ஏமாற்றம் உதைப்பந்தாட்ட இறுதிச்சுற்றில் கலந்து கொள்ளவிருந்த பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலை மாணவிகளை முன் அறிவித்தல் எதுவும் வழங்காது போட்டியில் கலந்து கொள்ளாமல் தடை விதித்தமை மாணவிகளை பெரும் மனவேதனைக்குட்படுத்தியுள்ளதுடன் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

வலய பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றுவரும் நிலையில் நேற்று வலிகாமம் வலய பாடசாலைகளான பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலைக்கும் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவிகளுக்கும் இடையிலான உதைபந்தாட்ட இறுதிச்சுற்றுப் போட்டி துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவிருந்தது.

போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகவிருந்த நிலையில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலை மாணவிகள் இறுதி போட்டியில் கலந்து கொள்ள வரவில்லை.

இதனால் மகாஜனா பாடசாலை மாணவிகள் காத்திருந்து போட்டி நடைபெறாத ஏமாற்றத்துடன் சென்றனர். இது தொடர்பில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலை அதிபரை தொடர்பு கொண்டு நாம் கேட்ட போது, தவிர்க்க முடியாத காரணத்தினால் நாம் போட்டியில் கலந்து கொள்வதற்காக மாணவர்களை அழைத்து செல்லவில்லை என தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக வலிகாமம் கல்வி வலய பணிப்பாளர் எஸ்.சந்திரராஜாவை தொடர்பு கொண்டு கேட்டபோது இன்று(நேற்று) குறித்த போட்டி இருப்பதாக எனக்கு தெரியாது ஆனால் குறித்த பாடசாலை அதிபர் ஆசிரியர்களுடன் பாடசாலை முன்னேற்றவிடயங்கள் குறித்து இன்று(நேற்று) கலந்துரையாடினோம்.

அத்துடன் உடற்கல்வி பாட ஆசிரியர் தொடர்பான விடயங்களை சரியான முறையில் செயற்படுத்துமாறும் கூறியிருந்தேன். ஆனால் மாணவிகளை போட்டிக்கு அனுப்பாமை தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்தார்.

இப்பாடசாலை மாணவிகள் ஏற்கனவே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் தேசிய மட்டத்தில் முதலிடங்களைப் பெற்று சாதித்துள்ளனர்.

நிர்வாக மட்டத்தில் ஏற்படும் சில குழப்பங்கள் காரணமாக மாணவிகளின் கனவுகள் சிதைக்கப்படுகின்றன. இச் செயற்பாடு அவர்களை மன உழைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது என பெற்றோர் தெரிவித்திருந்தனர்.

Related posts: