நீலங்களின் போர் துடுப்பாட்டம் கிளிநொச்சி இந்துவுக்கு வெற்றி!

Monday, June 11th, 2018

நீலங்களின் போர் என வர்ணிக்கப்படும் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய அணிக்கும் கிளிநொச்சி இந்துக் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டத்தில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி 6 இலக்குகளால் வெற்றிபெற்றது.

முதலாவது இன்னிங்ஸ்

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆட்டத்தில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அந்த அணி 148 ஓட்டங்களில் சகல இலக்குகளையும் இழந்தது. அதிகபட்சமாக சயந்தன் 87 ஓட்டங்களையும் பிரதீக்சன் 18 ஓட்டங்களையும் பகலவன் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணியின் சார்பில் அனுக்சன், பேபிசன் இருவரும் தலா 3 இலக்குகளையும் பார்த்தீபன் ஓர் இலக்கையும் வீழ்த்தினர்.

பதிலுக்குத் தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி 9 இலக்குகளை இழந்து 269 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டத்தை இடைநிறுத்தியது. ஆதிக பட்சமாக பிரதீசன் 98 ஓட்டங்களையும் அனுக்சன் 38 ஓட்டங்களையும் பார்த்தீபன் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கிருசாந் 3 இலக்குகளையும் லக்சன், அருள் இருவரும் தலா 2 இலக்குகளையும் கைப்பற்றினர்.

இரண்டாவது இன்னிங்ஸ்

இரண்டாவது இன்னிங்ஸீக்காகத் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய அணி சகல இலக்குகளையும் இழந்து 204 ஓட்டங்களைப் பெற்றது. பிரதீக்சன் 89 ஓட்டங்களையும் யுகேந்திரன் 36 ஓட்டங்களையும் சுபிகரன் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் தமிழினியன் 3 இலக்குகளையும் பார்த்தீபன், பேபிசன் இருவரும் தலா 2 இலக்குகளையும் வீழ்த்தினர். இரண்டாவது இன்னிங்ஸீக்காக களமிறங்கிய கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி 4 இலக்குகளை இழந்து 91 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

ஆட்டநாயகனாக கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணியின் பிரதீசன், சிறந்த பந்து வீச்சாளராகவும் சிறந்த களத்தடுப்பாளராகவும் அதே அணியின் பேபிசன், அகிலன் இருவரும் தெரிவாகினர். சிறந்த துடுப்பாட்ட வீரராக கிளிநொச்சி மத்தியமகாவித்தியாலய அணியின் பிரதீக்சன் தெரிவானார். சிறந்த சகலதுறை வீரராக கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணியின் அனுக்சன் தெரிவானார்.

Related posts: