தொடரை வென்றது தென்னாபிரிக்கா!
Sunday, February 5th, 2017தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இத்தொடரின் முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் தோல்வியை சந்தித்த இலங்கை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.
அதைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர்களான டிக்வெல்லா மற்றும் தரங்கா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்தனர்.
இருவரும் முதல் விக்கெட்டிற்கு 60 ஓட்டங்கள் எடுத்த போது தரங்கா 31 ஓட்டங்களில் வெளியேற, அடுத்து வந்த மெண்டிஸ்(4) சண்டிமல்(4), டிசில்வா(16), பதிரினா(18) ஓட்டங்கள் எடுக்க, இதைத் தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் இலங்கை அணி 39.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ஓட்டங்கள் குவித்தது. இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக டிக்வெல்லா அரைசதம் கடந்த 74 ஓட்டங்கள் குவித்தார்.
தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் பிரிடோரிஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
எளிய இலக்கை எட்டுவதற்கு அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் துவக்க ஆட்டக்காரர் டிகாக் 8 ஓட்டங்களில் குமாரா பந்து வீச்சில் போல்டாகி வெளியேறினார். அடுத்து ஆம்லா 34 ஓட்டங்களில் ரன் அவுட்டாக, டூப்லிசிஸ் 24 ஓட்டங்களில் வெளியேறினார்.
நான்காவது வீரராக களமிறங்கிய டிவில்லியர்ஸ் மற்றும் அடுத்து களமிறங்கிய டுமினி இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, தென் ஆப்பிரிக்கா அணியின் ஓட்டம் சீரான இடைவெளியில் எகிறியது.
இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 32 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்கள் குவித்து அசத்தல் வெற்றி பெற்றது.
சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டிவில்லியர்ஸ் அரைசதம் கடந்து 60 ஓட்டங்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருக்கு இணையாக ஆடிய டுமினியும் 28 ஓட்டங்கள் குவித்தார்.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது.
இதற்கு முன்னர் நடந்த டி 20 தொடரை இலங்கை அணி வென்று அசத்தியது, தற்போது தென் ஆப்பிரிக்கா அணி ஒரு நாள் தொடரை கைப்பற்றி பழிக்கு பழி தீர்த்துள்ளது.
Related posts:
|
|