டெல்லியை வீழ்த்தி புனே அணி வெற்றி

Friday, May 6th, 2016
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது.

9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்று இரவு நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்-ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டெல்லி அணியில் கேப்டன் ஜாகீர்கான், குயின்டான் டி காக், கிறிஸ் மோரிஸ், ஷபாஸ் நதீம் ஆகியோருக்கு பதிலாக பவான் நெகி, பிராத்வெய்ட், ஜெயந்த் யாதவ், இம்ரான் தார் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். கேப்டன் பொறுப்பை டுமினி கவனித்தார். புனே அணியில் புதிதாக சேர்ந்த உஸ்மான் கவாஜா, ஜார்ஜ் பெய்லி ஆகியோர் களம் இறக்கப்பட்டனர்.

‘டாஸ்’ ஜெயித்த புனே அணி கேப்டன் டோனி தனது அணி பீல்டிங் செய்யும் என்று அறிவித்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரிஷாப் பான்ட், சஞ்சு சாம்சன் ஆகியோர் களம் இறங்கினார்கள். ரிஷாப் பான்ட் 2 ரன்னில் அசோக் திண்டா பந்து வீச்சில் போல்டு ஆனார்.

அடுத்து கருண்நாயர், சஞ்சு சாம்சனுடன் இணைந்தார். இருவரும் அடித்து ஆடினார்கள். சஞ்சு சாம்சன் 17 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 20 ரன்கள் எடுத்த நிலையில் போலன்ட் பந்து வீச்சில் ஆர்.அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். சிறப்பாக ஆடிய கருண்நாயர் (32 ரன்கள், 23 பந்துகளில் 5 பவுண்டரியுடன்) ரஜத் பாட்டியா பந்து வீச்சில் திசரா பெரேராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து களம் கண்ட பில்லிங்ஸ் 24 ரன்னிலும் (15 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன்), பிராத்வெய்ட் 20 ரன்னிலும் (8 பந்துகளில் 3 சிக்சருடன்) பொறுப்பு கேப்டன் டுமினி 34 ரன்னிலும் (32 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்), ஜெயந்த் யாதவ் ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. பவான் நெகி 12 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 19 ரன்னும், முகமதுஷமி 3 பந்துகளில் 2 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். புனே அணி தரப்பில் ரஜத் பாட்டியா, போலன்ட் தலா 2 விக்கெட்டும், அசோக் திண்டா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய புனே அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உஸ்மான் கவாஜா 30 ரன்னிலும், சவுரப் திவாரி 21 ரன்னிலும், கேப்டன் டோனி 27 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ரஹானே 63 ரன்னுடனும் (48 பந்துகளில் 7 பவுண்டரியுடன்), திசரா பெரேரா 14 ரன்னுடனும் (5 பந்துகளில் 2 சிக்சருடன்) ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். டெல்லி அணி தரப்பில் இம்ரான் தார் 2 விக்கெட்டும், அமித்மிஸ்ரா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். புனே அணி வீரர் ரஹானே ஆட்டநாயகன் விருது பெற்றார்.

9-வது ஆட்டத்தில் ஆடிய புனே அணி 3-வது வெற்றியை தனதாக்கியது. 8-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி 3-வது தோல்வியை சந்தித்தது.

Related posts: