ஐ.பி.எல் ஏலத்தில் 76 வீரர்கள்!

Monday, February 6th, 2017

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் வரும் 20-ஆம் தேதி பெங்களூரில் நடைபெறுகிறது. 10-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில் ஒவ்வொரு அணியிலும் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் பங்கேற்பதற்காக மொத்தம் 750 வீரர்கள் தங்களின் பெயரைப் பதிவு செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக 28 வெளிநாட்டு வீரர்கள் உள்பட மொத்தம் 76 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து அணிகளும் சேர்ந்து மொத்தமாக ரூ.143.33 கோடிக்கு வீரர்களை வாங்கலாம். ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 27 வீரர்களை வைத்துக் கொள்ளலாம். இதில் 9 வெளிநாட்டு வீரர்களை சேர்த்துக் கொள்ளலாம்.

தற்போதைய நிலையில் பஞ்சாப் அணி, வீரர்களை வாங்குவதற்கு ரூ.23.35 கோடி செலவிடலாம். அதற்கடுத்தபடியாக டெல்லி அணி ரூ.23.1 கோடியும், மும்பை அணி ரூ.11.55 கோடியும், பெங்களூர் அணி ரூ.12.82 கோடியும், புணே அணி ரூ.17.5 கோடியும், குஜராத் அணி ரூ.14.35 கோடியும் வீரர்களை வாங்குவதற்காக செலவிடலாம். கொல்கத்தா அணியில் தற்போதைய நிலையில் 14 வீரர்கள் மட்டுமே இருப்பதால், அந்த அணி மேலும் 13 வீரர்களை இந்த ஏலத்தின் மூலம் வாங்க முடியும். கடந்த சீசனில் விளையாடியவர்களில் 44 வெளிநாட்டு வீரர்கள் உள்பட மொத்தம் 140 பேரை அந்தந்த அணிகளே தக்கவைத்துக் கொண்டன. 63 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக ஐபிஎல் வீரர்கள் ஏலம் பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த மறுத்ததன் காரணமாக பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர், செயலர் அஜய் ஷிர்கே உள்ளிட்டோரை உச்ச நீதிமன்றம் அதிரடியாக நீக்கியது. இதன் காரணமாக ஐபிஎல் ஏலம் தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

21-1437490805-ipl355-600

Related posts: