இலங்கை இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகுந்த ஆர்வம்!
Saturday, December 3rd, 2016
இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய இளம் வேகப்பந்து வீச்சாளர்களைக் கண்டறிந்து கொள்வதே தனது வருகையும் குறித்தபயிற்சி முகாமின் நோக்கமும் என இலங்கை வருகைதந்திருக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் வசீம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
டயலொக் கிரிக்கெட் விருது விழாவில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட இவர், இலங்கை தேசிய அணியிலுள்ள வேகப்பந்து வீச்சாளர்களுக்காக எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு பயிற்சி முகாமொன்றிலும் இவர் கலந்துகொண்டார்.
குறித்த பயிற்சிகளில் முன்னணி வீரர்களான லசித் மலிங்க மற்றும் நுவன் குலசேகர ஆகியோரும் கலந்து கொண்டனர். அனைவரும் பயிற்சிகளில் ஈடுபடவும் கற்றுக்கொள்ளவும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பதனை இது உணர்த்துகிறது.
என்னுடன் சேர்ந்து அக்காலத்தில் விளையாடிய, தற்போது பயிற்றுவிப்பாளர்களாக கடமையாற்றி வரும் சம்பக ராமநாயக்க, சமிந்த வாஸ் மற்றும் ரவீந்திர புஷ்பகுமார ஆகியோரும் வருகை தந்திருந்தனர். வீரர்களுக்கு நான் வழங்கும் ஆலோசனைகள் பற்றி பயிற்றுவிப்பாளர்கள் அறிந்திருத்தல் முக்கியமானது என்பதே எனது கருத்தாகும்.
பல முன்னணி சுழற்பந்துவீச்சாளர்களை உருவாக்கித் தந்த நாடு என்ற வகையில், இலங்கை அணி சுழற்பந்து வீச்சாளர்களின் உதவியுடனே பல போட்டிகளில் வெற்றிகளை சுவீகரித்துள்ளது. எனினும் அண்மைய காலத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டியுள்ள நிலையில், இலங்கையில் ஆற்றல் மிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் காணப்படுவதாக வசீம் அக்ரம் தெரிவித்தார்.
“வேகப்பந்துவீச்சாளர்களைப் பொறுத்த மட்டில் இலங்கை அணியின் எதிர்காலம் சிறப்பாக உள்ளதாக நான் நினைக்கின்றேன். நான் ஒரு பந்துவீச்சாளரில் முதலில் கவனிப்பது அவரின் வேகம் மற்றும் பந்தை காற்றில் ஸ்விங் செய்யும் திறமை என்பவை ஆகும். இம்மட்டத்திலுள்ள வீரர்களின் பந்துவீச்சுப் பாணியை மாற்றுவது தொடர்பில்
நான் பெரிதும் கவனம் செலுத்துவதில்லை. ஏனெனில் ஒருவரின் பந்துவீச்சுப் பாணியை மாற்ற வேண்டுமென்றால், அதனை 17 வயது போன்ற இளம் வயதிலேயே செய்திருக்க வேண்டும். இன்று நான் ஆலோசனை வழங்கிய 19 வயதிற்குட்பட்ட வீரர்களில் பலர் திறமை வாய்ந்தவர்களாகும் ஆர்வமுள்ளவர்களாவும் இருந்தனர். அவர்களுக்கு சிறந்த வழிகாட்டலை வழங்க வேண்டியது முக்கியம்.
இலங்கை நாடு மற்றும் இலங்கை கிரிக்கெட் எனக்கு மிகவும் நெருக்கமாகவே இருந்துள்ளன. என்னை பொறுத்தவரையில் இலங்கையே உலகில் மிகச்சிறந்த நாடு.” என்றார்.
திறமையான வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்குவதில் ஆசிய அணிகளுக்கிடையில் பாகிஸ்தானே எப்போதும் முன்னிலையில் இருந்து வந்துள்ளது. வசிம் அக்ரம், இம்ரான் கான், வக்கார் யூனிஸ் மற்றும் சொஹைப் அக்தார் ஆகியோர் குறிப்பிட்டுக் கூடிய வீரர்களில் சிலராவர்.
தற்போதைய பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் தொடர்பாக அக்ரம் கருத்து தெரிவிக்கையில், “வஹாப் ரியாஸ், மொஹமட் ஆமிர் மற்றும் எமது ஏனைய வீரர்களின் குறைபாடு என்னவென்றால், அவர்கள் பந்தை ஸ்விங் செய்வதில் சற்று பின்னிலையிலுள்ளனர்.
வேகமாக பந்துவீசுதல் முக்கியமானது. எனினும் ஒரு துடுப்பாட்ட வீரரிடம் கேட்போமேயானால், வேகமாக பந்துவீசும் ஒருவரை விட மந்தமான கதியில் வீசினாலும் பந்தை இருபுறமும் ஸ்விங் செய்யக்கூடிய பந்துவீச்சாளரை எதிர்கொள்வதே கடினமானது எனக் கூறுவர். பந்தை ஸ்விங் செய்வதில் திறன் பெற்ற ஒருவரினால் இலகுவாக விக்கெட்டுகளை பெறக் கூடியதாக இருக்கும். எனினும் பாகிஸ்தான் அணி தற்போது இவ்விடயத்தில் பின்னிலையிலுள்ளது.” எனத் தெரிவித்தார்.
Related posts:
|
|