ஆப்கானிஸ்தான் அணியின் 17 வருட கனவு நனவாகிறது!

Thursday, June 14th, 2018

ஆப்கானிஸ்தான் தனது முதலாவது டெஸ்ட்டை இன்று வியாழக்கிழமை இந்தியாவிற்கு எதிராக விளையாடும்போது அதன் 17 வருட கனவு நனவாகும்.

2001 ஆம் ஆண்டு ஐ.சி.சி. ஆப்கானை தனது இணை உறுப்பு நாடுகளில் ஒன்றாக சேர்த்துக் கொண்டது.

அவ்வேளை ஆப்கானிஸ்தான் தலிபானின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டது. தலிபானால் அங்கீகரிக்கப்பட்ட ஒரேயொரு விளையாட்டாக கிரிக்கெட் மாத்திரம் காணப்பட்டது.

எனினும் செப்ரெம்பர் 11 தாக்குதலிற்கு பின்னர் ஆப்கானிஸ்தான் மிக மோசமான உள்நாட்டு யுத்தத்தில் சிக்கியதைத் தொடர்ந்து கிரிக்கெட்டும் மறக்கப்பட்ட விடயமாக மாறியது.

எனினும் பாகிஸ்தான் எல்லையில் உள்ள முகாம்களில் வாழ்ந்த மக்கள் மத்தியில் கிரிக்கெட் தொடர்ந்தும் உயிர்வாழ்ந்தது.

தற்போது தேசிய அணியில் இடம்பெற்றுள்ள பல வீரர்கள் முகாமிலிருந்தே உருவானவர்கள்.

நாடுகடந்த நிலையில் இருந்த ஆப்கானின் கிரிக்கெட்டின் தாயகமாக காணப்பட்ட பெசாவரின் புழுதி மண்ணில் அவர்கள் கிரிக்கெட் விளையாட கற்றுக்கொண்டனர். இவர்கள் தற்போது தங்கள் முதலாவது டெஸ்ட் போட்டியை விளையாடத் தயாராகின்றனர்.

இன்று வியாழக்கிழமை ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 12 ஆவது நாடு என்ற தகுதியைப் பெறுகின்றது.

நாங்கள் எங்கள் டெஸ்ட் பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இது எங்களுக்கு மகத்தானதொரு தருணம் என தெரிவிக்கின்றார் ஆப்கானிஸ்தானின் டெஸ்ட் அணியின் தலைவர் ஸ்டனிக்சாய்.

இந்தியாவிற்கு எதிராக முதலாவது டெஸ்டை விளையாடுவது பெருமைக்குரிய விடயம் நாங்கள் எங்கள் திறமையை வெளிப்படுத்த முயல்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் முதலில் உள்ள அணிக்கு எதிராக விளையாடுவது பெருமைக்குரிய விடயம் கிடைக்கின்ற சந்தர்ப்பத்தில் எல்லாம் சிறப்பாக விளையாட முயல்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: