வேற்றுக்கிரகவாசிகள் இருக்கின்றார்கள்!
Tuesday, December 13th, 2016
அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது தெரியாத ஓர் அதிவேக பயணத்தினை நாம் செய்து கொண்டிருக்கின்றோம். இதில் கொஞ்சம் பிசகினாலும் அதோ கதிதான். மணிக்கு சுமார் 1040 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்திலேயே நாம் வசிக்கும் புவி இடை விடா பயணம் ஒன்றினைச் செய்து கொண்டிருக்கின்றது.
ஆனாலும் இவை நன்றாக தெரிந்தும் கூட இன்றுவரை பூலோக வாசிகள் பலரையும் ஆட்டிப்படைக்கும் ஓர் கேள்விதான் பூமியைத் தாண்டி வேற்றுக்கிரகங்கள் உள்ளதா? அப்படியே இருந்தால் அவற்றில் உயிரினங்கள் வசிக்கின்றதா? என்பதே.
இந்த கேள்விகளுக்கு நிச்சயமாக நாம் தனித்து தான் வாழ்கின்றோம் என்ற ஓர் பதிலோடு, வேற்றுக்கிரக வாசிகள் இருக்கின்றார்கள் என்றும் இரு வகை பதில்கள் கொடுக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றது.
அதேபோன்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி வேற்றுக்கிரகமும் பூமியைத் தாண்டிய வெளி உயிரினங்களும் இருப்பது உறுதி என்றே நிறுவப்படுகின்றது. கண்ணால் பார்க்க மட்டிலும் நாம் அதனை நம்பப்போவதில்லை அதற்காகவே கணித அடிப்படையில் இது நிச்சயம் என ஆய்வாளர்கள் அடித்துக் கூறுகின்றார்கள்.
கணித மேதைகளின் நிறுவல் படி, நாம் வசிக்கும் பூமி, சூரியன் எனும் ஒரு நட்சத்திரத்தினைச் சுற்றிவருகின்றது. இதே சூரியனை பல கோள்கள் மையமாகக்கொண்டு சுற்றுகின்றன இது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.
இதேபோல் பிரபஞ்சத்தில் சுமார் 100,000,000,000 இற்கும் அதிகமான நட்சத்திரங்கள் புவியில் இருந்து பார்க்கும் போது தென்படுவதாக கூறப்படுகின்றது.
ஆனாலும் இதனைவிட அவை அதிகம் என்பதே உண்மை இப்போதைக்கு இந்த எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. இதில் சிறு திருத்தம் மேற்குறிப்பிட்ட நட்சத்திரங்கள் எமது பால்வீதியில் மட்டும் இருக்கும் எண்ணிக்கை.
அதேபோன்று பிரபஞ்சத்தில் 100,000,000,000இற்கும் அதிகமான விண்மீன்பேரடைகள் எனப்படும் பால்வீதிகள் இருப்பதாகவே கணிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் நாம் வாழும் பிரபஞ்சத்தில் சுமார் (100,000,000,000 X 100,000,000,000) 10,000,000,000,000,000,000,000 நட்சத்திரங்கள் (ஒப்பீட்டளவில்) இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
இத்தனை நட்சத்திரங்களும் தனித்தனி சூரியன்கள். இங்கு 1,000,000 நட்சத்திரங்களில் ஒன்று மட்டுமே கோள்களைக் கொண்ட ஓர் சூரியன் என எடுத்துக்கொண்டு அந்த ஓர் நட்சத்திரத்தையும் ஒரே ஒரு கோள் மட்டும் சுற்றி வருகின்றது எனவும் கணக்கிடுவோம்.
இந்த கணக்கின் படி எமது பிரபஞ்சவெளியில் 10,000,000,000,000,000 கோள்கள் உள்ளன. அடுத்து இந்த 100 கோடி கோடி கோள்களில் எத்தனைக் கோள்களில் உயிரினங்கள் வாழலாம் என நிகழ்தகவின் படி ஓர் ஒப்பீடும் கூறப்பட்டுள்ளது.
அதாவது இதில் 1,000,000 கோள்களுக்கு ஒன்று, அதில் மட்டுமே உயிரினங்கள் வாழலாம் என்றால் 10,000,000,000 கோள்களில் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கத்தான் செய்கின்றது என கணிதவியலாளர்கள் கூறுகின்றனர். ஆக நாம் தனித்து வாழ்கின்றோம் என்று கூறிக்கொள்பவர்களுக்கு, நிச்சயமாக வேற்றுக்கிரகவாசிகளின் மத்தியிலேயே நாம் வாழ்ந்து வருகின்றோம் என்பதே பதிலாக அமைந்து விடும்.
இதன் படி பூமியில் கிடைக்கும் ஆதாரங்களும் அவற்றை உண்மையாக்கிக் கொண்டே வருகின்றது. ஆனாலும் எமது கண்களுக்கு ஏன் வேற்றுக்கிரகவாசிகள் வெளிப்படையாக தெரிவதில்லை என்பதற்கு பதில் இப்போதைக்கு தெரியாது என்பதே.
எனவே வேற்றுக்கிரகவாசிகள் இருக்கின்றார்கள் என்பதனை நம்பவேண்டிய கட்டாயம் கணித அறிவின்படியும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள். அப்படியே அவர்கள் எம்மைவிட அறிவியலில் சிறந்தவர்கள் என்றால் நாம் தான் இன்னும் அவர்களை பார்க்கவில்லை அவர்கள் எம்மை பார்த்துக் கொண்டிருக்கலாம்.
எனினும் வேற்றுக்கிரக வாசிகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். மனிதரைப்போன்று அல்லது நாம் பார்த்த உயிரினங்கள் போல் இருப்பார்கள் என்பது எல்லாம் கட்டுக்கதை அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
உதாரணமாக சுவாசம் கூட தெரியாதவர்களாக, இரத்தம் இல்லாதவர்களாகவும் இருக்கலாம் என்பதிலும் நியாயம் உண்டு, காரணம் அவர்களின் உயிர்க்கூறு வேறானதான இருக்கும் இது ஏற்றுக்கொள்ளப்பட்ட வாதம்.
அது சரி அப்படி என்றால் வேற்றுக்கிரகவாசிகளின் கடவுள்கள் யார்? உணவுமுறை என்ன? என்றெல்லாம் என்னை கேட்கவேண்டாம் இப்போதைக்கு பதில் தெரியாது ஆனாலும் கிடைத்துவிடும் என்றாவது ஒருநாள்!
Related posts:
|
|