39 பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

Thursday, October 13th, 2016

ஓராண்டு காலமாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு நடத்திய விசாரணைகளின் மூலம் 39 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 39 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஆணைக்குழுவின் பணிகள் தொடர்பில் விளக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர், ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

பிரதான பொலிஸ் பரிசோதகர் முதல் பொலிஸ் கான்ஸ்டபிள் வரையில் இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும், 27 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பிலான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.சுமார் ஓராண்டு காலமாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு 39 உத்தியோகத்தர்கள் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

national-police-commission2-720x480