2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் 150 நாட்களாக குறைப்பு – – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அறிவிப்பு!
Saturday, April 10th, 2021
பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைளை 2021 ஆம் ஆண்டு 150 நாட்களாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் இன்றையதினம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில் –
இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் நடத்தப்பட வேண்டிய உயர்தர பரீட்சைகளை ஒக்டோபர் 4 ஆம் திகதியும், டிசம்பரில் நடத்தப்பட வேண்டிய சாதாரண தர பரீட்சைகளை 2022 ஜனவரியிலும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டுக்கான உயர்தர பரீட்சைகள் ஒக்டோபர் 4 ஆம் திகதி ஆரம்பமாகி 30 ஆம் திகதி வரை நடைபெறும். அதேபோன்று சாதாரண தர பரீட்சைகள் 2022 ஜனவரி இறுதி வாரத்தில் ஆரம்பிக்கப்படும்.
அதேபோல் ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையை ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் 200 நாட்கள் பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அதேநேரம் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உரிய காலத்தில் தேசிய பரீட்சைகள் எதுவும் 2020 ஆம் ஆண்டு இடம் பெறவில்லை. 2020 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை கடந்த மாதம் இடம் பெற்றது.
அந்தவகையில் 2021 ஆம் ஆண்டு பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைளை 150 நாட்களாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் 2021 இக்கான சாதாரண தர பரீட்சையினை இவ்வருடம் டிசம்பர் மாதம் நடத்த ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் பரீட்சை ஒரு மாத காலத்திற்கு பிற்போடப்படப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ள அமைச்சர் பீரிஸ்2021 ஆம் ஆண்டுக்கான தேசிய பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தயாராக போதுமான காலலகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றும், வழங்கப்பட்டுள்ள காலத்தை மாணவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|