வெளிநாட்டவர்களின் சிறுநீரகங்களை இலங்கையில் பொருத்தத் தடை – அமைச்சர் ராஜித !

வெளிநாட்டவர்களிடமிருந்து சிறுநீரகங்களைப் பெற்று இலங்கையில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது.
இந்தியர்களால் சிறுநீரகங்கள் வழங்கப்பட்டு, இலங்கையிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் சிறுநீரக மாற்று சிகிச்சைகள் செய்யப்படுவதாக, சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகியதையடுத்தே சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, மேற்கண்டவாறு பணித்துள்ளார்.
மனித உறுப்புக்களை தானம் செய்தல் எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, உறுப்புக்களை தானம் செய்வதற்கு முன்வருவோருக்கு, ஒரு உதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளோம். அவர்கள், வாழ்க்கை முழுவதும் அரச வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுக் கொள்வதற்கான திட்டமொன்றை முன்வைக்கவுள்ளோம்.
மனித உறுப்புக்களை தானம் செய்வதில், இலங்கை ஒரு நிலையான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்பதையிட்டு நான் பெருமையடைகின்றேன். எமது நாட்டிலுள்ள அர்ப்பணிப்புமிக்க உயர் தொழிற்துறை வைத்தியர்கள், சிறுநீரகங்கள், இருதயங்கள் மற்றும் பிற உறுப்பு மாற்று சிகிச்சைகளை குறைந்த சலுகைகளுடன் மிகவும் வெற்றிகரமான முறையில் செய்து முடித்துள்ளனர் என்றார்.
Related posts:
|
|