வீதிப் பாதுகாப்பு தொடர்பாக தேசிய வாரத்தை பிரகடனப்படுத்த போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
Tuesday, May 4th, 2021வீதிப் பாதுகாப்பு தொடர்பாக தேசிய வாரத்தை பிரகடனப்படுத்தவும், எதிர்வரும் காலங்களில் வருடாந்தம் நவம்பர் மாதத்தில் இவ்வாறு வாரத்தை நடத்துவதற்கும் போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையில் நேற்றையதினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இதற்கான அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் –
தற்போது நாட்டில் நாளொன்றுக்கு 8-10 பேர் வீதி விபத்துக்களால் உயிரிழப்பதுடன், அவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் என்றும் தெரியவந்துள்ளது. அதனால் அவர்களில் தங்கி வாழ்பவர்கள் நிர்க்கதிக்குள்ளாவதுடன், வருடந்தோறும் குறித்த எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் காணமுடிகின்றது.
அதேநேரம் கடந்த வருடத்தில் 2023 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், அவற்றில் 2114 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்துக்களில் 963 விபத்துக்கள் இருசக்கர மோட்டார் சைக்கிளுடன் தொடர்புபட்டுள்ளதுடன் அதில் 987 பேர் பலியாகியுள்ளனர்.
அத்துடன் முச்சக்கர வண்டிகள் மற்றும் பாரவூர்திகளின் விபத்துக்களால் வருடாந்தம் அண்ணளவாக 500 பேர் வரை பலியாகின்றனர்.
இவ்விடயங்களைக் கருத்தில் கொண்டு, வாகன விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூரும் சர்வதேச தினமான நவம்பர் மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் தேசிய பாதுகாப்பு வாரத்தை பிரகடனப்படுத்துவதற்கும், வாகன விபத்துக்களைக் குறைப்பதற்காக அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலை மாணவர்கள், சாரதிகள் மற்றும் பொதுமக்களை தெளிவூட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை கவனம் செலுத்தியுள்ளது. அதற்கமைய, 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் வீதிப் பாதுகாப்பு தொடர்பாக தேசிய வாரத்தை பிரகடனப்படுத்தவும், எதிர்வரும் காலங்களில் வருடாந்தம் நவம்பர் மாதத்தில் இவ்வாறு வாரத்தை நடத்துவதற்கும் போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|