விவசாய ஆராய்ச்சி – உற்பத்தி உதவி அதிகாரிகளுக்கு வதிவிடங்களிலேயே இடமாற்றம் – அமைச்சர் மகிந்த அமரவீரவால் கமநல சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கு ஆலோசனை!

Thursday, June 30th, 2022

சகல விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவி அதிகாரிகளுக்கும் அவர்களது நிரந்த வதிவிடங்களிலேயே இடமாற்றம் வழங்குமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மகிந்த அமரவீரவால் கமநல சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ள யூரியா பசளை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

அந்த பணிகளை சகல விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவி அதிகாரிகளின் பூரண ஆதரவுடன் முன்னெடுக்கும் நோக்கிலே குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, வசிப்பிடங்களில் இருந்து பிற பகுதிகளில் சேவையாற்றும் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடன் எல்லை வசதியின் கீழ் அடுத்த வாரம் ஓமானில் இருந்து 40,000 மெட்ரிக் டன் யூரியா பசளை நாட்டை வந்தடையவுள்ளது.

இதனையடுத்து, 25,000 மெட்ரிக் டன் பசளை நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பசளையை சிறுபோகத்தில் நெற் பயிர் செய்யும் சகல விவசாயிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மகிந்த அமரவீர அதிகாரிகளுக்கு நேற்று ஆலோசனை வழங்கினார்.

இதன்படி, ஒரு ஹெக்டேயருக்கு தலா 100 கிலோகிராம் வீதம் யூரியா பசளையை வழங்குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தற்போதைய எரிபொருள் மற்றும் உர நெருக்கடி காரணமாக பழங்களின் ஏற்றுமதிக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் நாட்டின் மரக்கறி மற்றும் பழங்கள் சர்வதேச சந்தையை இழக்கும்; அபாயம் உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டின் மரக்கறிகள் மற்றும் பழங்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் அதிக கேள்வி நிலவுகின்ற நிலையில், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதிகள் ஊடாக 80 முதல் 90 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக கிடைக்கப்பெறுவதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: