ராஜபக்ஷர்களின் நிதியை மீளப் பெற்றுக்கொடுங்கள் – ஜனாதிபதியிடம் நாமல் ராஜபக்ச கோரிக்கை!

Monday, April 10th, 2023

ராஜபக்ஷர்கள் உகண்டாவுக்கு எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் நிதியை மீளப் பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜபக்ஷக்கள் உகண்டாவிற்கு பணத்தை எடுத்துச் சென்றிருந்தால், ஜனாதிபதியும் அரசாங்கமும் தலையிட்டு பணத்தை மீளக் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் இது தொடர்பில் விசாரணைகளை நடத்தியபோதும் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என்றும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்

இதனிடையே

கடந்த ஆண்டு கட்சி சார்பற்றவர்கள் எனக் கூறி இலட்சக்கணக்கான மக்கள் காலி முகத்திடலில் போராடிய போதும், இறுதியில் கோட்டாபய ராஜபக்ச மாத்திரமே கட்சி சார்பற்றவராக மாறியதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

கொட்டிகாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே முன்னாள் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

சீனாவுக்கு அடுத்தபடியாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை மஹிந்த ராஜபக்சவே கொண்டு வந்ததாகவும், தற்போது புதிய கட்சிகளை உருவாக்கி திட்டங்களை கொண்டு வரும் தேசிய மக்கள் படையின் அனுரகுமார திசாநாயக்க போன்றவர்கள், சீகிரி கல்லை உடைக்க வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி அலுவலகத்திற்கு வந்தவர்கள், மகிந்த ராஜபக்சவை பார்ப்பதற்காக மாத்திரம் என்றும் செயற்பாட்டாளர்களை தாக்குவதற்காக அல்ல என்றும் குறிப்பிடுகின்றார்.

அரசியலில் வன்முறையை தாம் மதிப்பதில்லை என்றும் வன்முறையை விரும்பாதவர்கள் தாம் என தெரிவித்த நாமல் ராஜபக்ச அரசியலில் உள்ள வன்முறைகளை மஹிந்த ராஜபக்ச அகற்றியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

000

Related posts: