முன்னெடுக்கப்படும் பணிகள் சீர்குலைந்தால் ஒரு வாரத்திற்குள் வங்கி முறைமை வீழ்ச்சியடையும் – ஜனாதிபதி ரணில் எச்சரிக்கை!

Saturday, August 5th, 2023

அரசாங்கத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பணிகள் சீர்குலைந்தால் ஒரு வாரத்திற்குள் வங்கி முறைமை வீழ்ச்சியடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.

நேற்றையதினம் (04.08.2023) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் எமது நாடு வங்குரோத்து நாடு, ஆனாலும் தற்போதைய அரசாங்கத்திற்கு பிரச்சினைகளை தீர்த்து கொண்டு முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. கடன் நீடிப்பு முயற்சிகளை நாம் முன்னெடுத்து வருகிறோம்.

கடந்த காலங்களில் நாட்டிற்கு வருகைத்தந்த தலைவர்களுடனும் அது குறித்து கலந்துரையாடினோம். கடன் நீடிப்பின் பின்னரும் எமது கடன்களை மீளச் செலுத்தாமல் இருக்க முடியாது. கடன் மீள்செலுத்துகைக்கான காலத்தை நீடித்துக்கொள்வதை மாத்திரமே செய்ய முடியும்.

அதேபோல் அத்தியாவசிய பொருட்களில் இறக்குமதிக்கு அவசியமான கடன்களையும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும்.  அந்த கடன்களை செலுத்துவதற்கான முறைமையொன்றும் அவசியம். தற்போது உள்ள சம்பிரதாய பொருளாதார முறையினால் அதனை செய்ய முடியாது.

அதனால் போட்டித்தன்மை மிக்க ஏற்றுமதி பொருளாதாரத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். இருப்பினும் அதற்கு முன்னதாக கடன் விவகாரங்களை நாம் நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்.

அதுகுறித்த யோசனைகளை அமைச்சரவையில் சமர்பித்துள்ள அதேநேரம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.

அதேபோல் பல்வேறு தரப்புக்களிடத்தில் பேச்சுக்களை நடத்தியுள்ளோம். பின்னர் அந்த யோசனைகளை நாடாளுமன்றத்தில் சமர்பித்திருந்தோம். நாடாளுமன்றம் அரச நிதிக் குழுவிடம் ஆலோசித்த பின்னர் அதனை ஏற்றுக்கொள்வதற்கான யோசனை அரச நிதிக் குழுவினால் முன்வைக்கப்பட்டது.

கடன் நீடிப்பு பணிகளை செப்டெம்பர், அக்டோபர் மாதமளவில் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகம் - இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம் அறிவிப...
ஆசிய அபிவிருத்தி வங்கி தொழில்நுட்ப உதவி - நீர் வழங்கல் துறையின் எதிர்கால நடவடிக்கை திறம்பட முன்னெடுக...
டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகிய நிலையில் யாழ்-போதனா வைத்தியசாலையில் 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றன...