மின்சார தேவை அதிகரிப்பு – நாடு முழுவதும் இன்றும் இரு மணிநேர மின்வெட்டு – பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் அறிவிப்பு!

Tuesday, February 22nd, 2022

மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் கிடைக்க பெறாமையினால் இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க இன்றும் நாடு முழுவதும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, மாலை 4.30 மணிமுதல் இரவு 10.30 மணி வரை 03 பிரிவுகளில் இரண்டு மணித்தியாலங்கள் மாத்திரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

541 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் இன்றும் மின் தடையை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –

“நேற்று இரவு அதிகபட்சமாக 2,150 மெகா வோட் மின்சார தேவை காணப்பட்டது. இரவு நேரத்தில் அதிகபட்ச மின் தேவை 2,700 மெகா வோட் வரை அதிகரிக்கலாம் என்பதால், அந்த தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தடையில்லா மின்சாரம் வழங்கும் நெருக்கடிக்கு மின்சாரம் தயாரிக்க தேவையான எரிபொருள் பற்றாக்குறையும் ஒரு காரணமாகும். மற்றொரு காரணம், நீர்மின் உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளமையாகும்.

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 22 வீதமாகவும், சமனல ஏரியின் நீர்மட்டம் 32 வீதத்திலிருந்து 9 வீதமாகவும், மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 45 வீதத்திலிருந்து 4 வீதமாகவும் குறைவடைந்துள்ளமை நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது.

ரன்னெகல நீர்த்தேக்கத்தில் மாத்திரம் 50 சதவீதத்திற்கும் அதிகமான நீர்மட்டம் காணப்படுகின்றது. இதனால், அனல் மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

07 மின் உற்பத்தி நிலையங்கள் இன்னும் செயல்படவில்லை. களனிதிஸ்ஸ சுழற்சி மின் நிலையத்தில் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெப்தாவும் நேற்று இரவு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

ஆனால், தற்போது ஒரு சில மின் உற்பத்தி நிலையங்களில் மாத்திரமே போதுமான எரிபொருள் இருப்பது நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்றைய தினம் நாடு முழுவதும் 11 வலையமைப்புகளில் தலா 2 மணித்தியாலங்கள் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: