மனித உரிமைகள் தொடர்பாக இலங்கையின் வேலைத்திட்டங்கள் மிக முன்னேற்றகரமாக உள்ளன – ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் தெரிவிப்பு!

மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மிக முன்னேற்றகரமாக உள்ளன என ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் லோர்ட் தாரிக் அஹமட் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அதனை மேலும் வலுப்படுத்துவதற்கு, நடைமுறை மற்றும் இலக்குகளை அடையக்கூடிய அணுகுமுறைகளுடன் முன்னோக்கிச் செல்வதன் மூலம் இலங்கையிலுள்ள அனைத்து மனித உரிமை பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து உரையாற்றும் போதே, அமைச்சர் தாரிக் அஹமட் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையின் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அந்நாட்டின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட்டிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தெற்காசியா, ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் பொதுநலவாய அமைப்புக்கான இராஜாங்க அமைச்சர் என்ற வகையில், இந்து சமுத்திரப் பிராந்தியம், மத்திய ஆசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கிடையிலான ஒத்துழைப்புகளை ஏற்படுத்துவதற்கான பல்வேறு துறைகள் சார்ந்த பொறுப்புகள், லோர்ட் தாரிக் அஹமட்டிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்திவலுத் துறையின் இலக்குகளை அடைவதற்கும் தொழில்நுட்பம்சார் தடைகளை வெற்றிகொள்வதற்கும் உதவுமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த லோர்ட் அஹமட், தனது நாட்டுக்குச் சென்றவுடன் இந்த விடயம் தொடர்பில் கூடிய விரைவில் ஆராய்ந்து, அது தொடர்பான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கைக்கான முதலீட்டு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் முதலீட்டாளர்களை ஈர்க்க முடியும் எனச் சுட்டிக்காட்டிய அவர், ஐக்கிய இராச்சியத்தில் வாழும் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் இலங்கையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
இலங்கையின் சுகாதார ஊழியர்களுக்கு ஐக்கிய இராச்சியத்தில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பொருளாதாரத் துறைக்கான ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாகவும், லோர்ட் உறுதியளித்தார்.
அத்துடன் இலங்கை எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதுடன், மக்கள் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
அதற்கு, ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கின்ற புலம்பெயர் இலங்கையர்களுடன் இணைந்துச் செயற்பட விருப்பம் தெரிவித்த ஜனாதிபதி, அதற்காகப் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடச் சந்தர்ப்பம் வழங்குமாறும் லோர்ட் தாரிக் அஹமட்டிடம் கேட்டுக்கொண்டார்.
இலங்கையின் நெருங்கிய மற்றும் நடைமுறை நண்பராக ஒத்துழைக்க, ஐக்கிய இராச்சியம் எப்போதும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறிய அவர் ஐக்கிய இராச்சியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 2023 இல் 75 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. இதற்காக ஒரு விழாவை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதில், இரு நாடுகளின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் கலை, கலாசார நிகழ்வுகள் மற்றும் இரு நாட்டு மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்தும் வகையிலான நிகழ்வுகளை நடத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|