மதரசாக்களை கல்வித்துறை கண்காணிப்பில் கொண்டு வர அரசு முடிவு!

Wednesday, May 22nd, 2019

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலைப் படைத் தாக்குதலில் 250 க்கும் அதிகமான உயிர்களை பறித்த தேசிய தௌஹீத் ஜமாத் உள்ளிட்ட 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்தது.

அத்துடன் விசா காலம் முடிந்தும் இலங்கையில் தங்கி இருந்த சுமார் 200 இஸ்லாமிய போதகர்கள் உள்பட 600 வெளிநாட்டினர் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், முஸ்லிம்கள் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் மதரசாக்களை (இஸ்லாமிய கல்விக் கூடங்கள்) இனி கல்வித்துறையின் கண்காணிப்பில் கொண்டு வரப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இஸ்லாமிய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களின் சம்மதத்துடன் இதை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், நாட்டில் இஸ்லாமிய சட்ட (ஷரியா) பல்கலைக்கழகம் அமைக்கவும் அனுமதி அளிக்க முடியாது. இதற்கான அதிகாரம் எங்கள் கையில் கிடையாது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இயங்கிவரும் மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழத்துக்கு இனி மட்டக்களப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யவும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை விசாரித்த உண்மை கண்டறியும் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

எனவே, பட்டப்படிப்புக்கான பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே இனி அனுமதி அளிக்கும் வகையில் கல்வித்துறையில் சட்டத்திருத்தம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts: