மணல்காடு மணல் மேடுகளைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாகப் பராமரிக்க நடவடிக்கை – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்து!

Thursday, February 11th, 2021

யாழ்ப்பாணம், மணல்காடு மணல் மேடுகளை, கடலோர பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ், பாதுகாக்கப்பட்ட பகுதியாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அத்துடன், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை நிறைவுசெய்ய நடவடிக்கை எடுப்பது குறித்தும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சில் முன்னேற்ற மறுஆய்வுக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் இக்கலந்துரையாடலின்போது காலத்துடன் போராடி ஐந்து வருட காலத்தில் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டியேற்படும் என பிரதானிகளிடம் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு செய்யத் தேவையான பலமும் அனுபவமும் கொண்ட அரச அதிகாரிகள் குழு தங்களிடம் உள்ளது எனத் தெரிவித்த பிரதமர், வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக எழக்கூடிய எந்தவொரு பிரச்சினைகளையும் தீர்க்க தனிப்பட்ட முறையில் தலையிடுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், நகர அபிவிருத்தி, கரையோரக் கழிவுப்பொருள் அகற்றல் மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சிற்குச் சொந்தமான மற்றும் அவற்றில் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு மேலதிகமாக, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் மூலம் மூன்று மாவட்டங்களில் சிறு குளங்களைப் புனரமைத்தல் மற்றும் கொழும்பைப் போல் 21 மாவட்டங்களில் உடற்பயிற்சிக்கான இடங்கள் மற்றும் சிறுவர் பூங்காக்களுடன் 21  பூங்காக்களை நிறுவ எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடலரிப்பைத் தடுக்க நாடு முழுவதும் 22 கடலோர வேலைத் தளங்கள் நிறுவப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறையை கருத்தில் கொண்டு பொத்துவில் மற்றும் அருகம்பே பகுதிகளின் கடலரிப்புப் பிரச்சினைக்குத் தீர்வை வழங்க கடலோர பாதுகாப்புத் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும், யாழ்ப்பாணம் மணல்காடு மணல் மேடுகளை இந்த திணைக்களத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக பாதுகாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதான வீதிகளிலிருந்து கடற்கரையை அண்மித்த வீதிகளுக்கு மக்களுக்கு காணப்படும் அசௌகரியத்தை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கடலோரப் பகுதியில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்றுமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் வேகமாக உயர்வடைந்துள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன், இந்த மீள்குடியேற்றங்கள் சட்டவிரோதமானவை என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்நிலையில், அவற்றை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: