மக்கள் எதை எதிர்பார்த்தார்களோ அதை நாம் எமது அரசியல் அதிகார காலப் பகுதியில் செய்து காட்டியிருக்கின்றோம் – தேசிய எழுச்சி முன்னமர்வு மாநாட்டில் பசுபதி சீவரத்தினம்

இதுவரைகாலத்தில் மக்கள் மத்தியில் நாம் செய்த சேவைகளை நோக்கும் போது இந்த மண்ணில் எமது கட்சிதான் மிகப் பெரும் தமிழ் கட்சியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் கடந்தகால சூழ்நிலைகளால் நாம் செய்த மக்கள் பணிகள் அரசியல் மயப்படுத்தப்படாததன் காரணத்தால் நாம் முழுமையான பிரதிபலன்களை பெறமுடியாது போயுள்ளது. இத்தகைய நிலைமைகளை மாற்றியமைப்பதற்காகவே நாம் தேசிய மாநாட்டை தற்போது நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கான ஒரு முன் அமர்வாகவே இந்த மாநாடு தீவகப்பகுதியில் இன்று நடத்தப்படுகின்றது – என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார்.
கடந்தவாரம் வேலணை வங்களாவடி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற தேசிய மாநாட்டின் முன்னமர்வு நிகழ்வில் தலைமையுரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் –
ஏன் இந்த மாநாடு தற்போது நடத்தப்படுகின்றது என்று வந்திருக்கக் கூடிய எமது தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் கேள்வியாக எழுந்திருக்கலாம். எமது கட்சியின் எதிர்கால செயற்பாடுகளில் ஆணித்தரமான ஒரு நம்பிக்கையை விதைத்து அதனூடாக கட்சியின் நகர்வுகளை முன்னிறுத்தி புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்காகத்தான் இந்த மாநாடு கூட்டப்படுகின்றது என்பதை நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நாம் கடந்த 30 வருடங்களாக தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஆயுதப் போராளியாக, தலைமை தாங்குகின்ற ஜனநாயக போராளியாக இன்றுவரை மக்களுடன் இருந்துவரும் டக்ளஸ் தேவானந்தா என்ற ஒரு தலைவரின் கீழ் வழிகாட்டப்பட்டிருக்கின்றோம்.
எமது கட்சி இந்த 30 வருட காலத்தில் எத்தனையோ பல மாநாடுகளை நடத்தியிருக்கலாம். ஆனால் இக்காலப் பகுதியில் நாம் எமது கட்சியின் நலனை விடுத்து மக்களது அனைத்து பிரச்சினைகளையும் தான் முதன்மையாகக் கொண்டு தீர்வுகளை பெற்றுக்கொடுத்திருக்கின்றோம்.
மக்கள் எந்த வகை அரசியல் சூழ்நிலைகளில் வாழ்ந்தார்களோ எப்படிப்பட்ட நிலைமைகளில் எதை எதிர்பார்த்தார்களோ, அதை எங்களுடைய வரலாற்றில் எங்களுக்குக் கிடைத்த காலங்களில் எங்களுக்குக் கிடைத்த அரசியல் அதிகாரங்களில் இருந்து நாங்கள் எமது வேலைத்திட்டங்களூடாக மக்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளோம். கிடைத்த அதிகாரங்களை கொண்டு நாம் மக்களுக்கு ஆற்றிய பணிகளையும் எவரும் மறந்திருக்கமாட்டார்கள். ஆனால், நாங்கள் இந்த பணிகளில் வெற்றி கண்டிருந்தாலும்கூட, எமது கட்சியைப் பலமானதாகக் கொண்டு செல்வதில் தவறுகளை விட்டுள்ளோம்.
பணிகளுக்கான பணிகளின் பலன் எங்களுக்குப் போதியளவு கிடைக்கவில்லை என்ற அங்கலாய்ப்பும் மனஅதிருப்தியும் எம்மிடம் ஏற்பட்டிருந்தாலும் இது எதனால் எற்பட்டது என்பதை நாம் ஒவ்வொருவரும் சுயவிமர்சனங்களூடாக திரும்பி பார்க்கவேண்டிய நிலையில் நாம் தற்போது உள்ளோம்.
மக்கள் எதிர்பார்க்கின்ற விடயங்களை நாம் முன்னெடுத்தாலும்கூட எங்களுடைய வேலைகள் இதுவரை முழுமையான அரசியல் மயமாக்கப்படவில்லை என்பதுடன் மக்களை அதற்கான வழிமுறைகளுக்குள் இணைத்துக்கொள்ளவில்லை என்பதனையும் நாங்கள் புரிந்து செயற்படுதல் வேண்டும். எனவேதான் எமது கடந்த கால வேலைத்திட்டங்களும், செயற்பாடுகளும் மீள்பார்வை செய்யப்பட வேண்டும் என்பதற்காக இந்த மாநாட்டை கூட்டியுள்ளோம்.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள தீவக மக்களிடம் நாம் கேட்பது என்னவென்றால், சரியான தலைவரின் வழிநடத்தலின் கீழ் நாம் தற்போது பயணித்துக்கொண்டிருக்கின்றோம். இதை மேலும் பலப்படுத்தி செல்வதற்கு எமது கட்சியைப் பலமானதாகக் கட்டியெழுப்பி மக்களுக்குரிய கட்சியாகக் கட்டியெழுப்புவதற்கும் உங்கள் ஒவ்வொருவரினதும் எதிர்பார்ப்புகளுக்கும் விடைகளைக் கண்டு முன்னேறுவதற்குத் உங்கள் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் கைகளை பலப்படுத்த தயாராகுங்கள் – என தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|