பொதுமக்கள் தினத்தில் அலுவலகங்களில் அதிகாரிகள் வருகைதராதுவிட்டால் தெரியப்படுத்துங்கள் – பொது சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு கோரிக்கை!

Sunday, September 27th, 2020

அரசாங்கத்தினால் பொதுமக்கள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பொது சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

சில அரச நிறுவனங்களில் திங்கட்கிழமையன்று அதிகாரிகள் இல்லாத சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்தகைய நிறுவனங்கள் தொடர்பில் அவற்றுக்கு பொறுப்பான அமைச்சுக்கோ அல்லது தமது அமைச்சிற்கோ தெரியப்படுத்துமாறு பொது சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே, செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் தமது காரியாலயங்களுக்கு செல்லாத கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பிலும் தமக்கு தெரியப்படுத்தமாறு பொது சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. அத்தகைய அதிகாரிகள் தொடர்பில் விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதிமுதல் அமுலாகும் வகையில், கிராம உத்தியோகத்தர்களின் சேவைகள் தொடர்பான சுற்றுநிரூபமொன்று உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் அண்மையில் வெளியிடப்பட்டது.

இதனடிப்படையில் கிராம உத்தியோகத்தர்கள் தமது ஓய்வு நாள் தவிர்ந்த ஏனைய 6 நாட்களும் 24 மணித்தியாலங்கள் தமது பிரிவில் கடமைகளை முன்னெடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரையும் சனிக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும் கிராம உத்தியோகத்தர்கள் அலுவலகங்களில் இருக்க வேண்டும் என குறித்த சுற்றுநிரூபத்தினூடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமைகளில் பிரதேச செயலகங்களில் பணிகளில் ஈடுபட வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 3 நாட்களில் ஒரு நாளை ஓய்வு தினமாக பெற்று ஏனைய இரண்டு நாட்களில் கள உத்தியோகத்தில் ஈடுபட வேண்டுமென உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts: