பெண் கிராம அலுவலரைக் கடத்தியவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை!

Thursday, October 13th, 2016

கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி தென்மராட்சிப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராமஅலுவலர் பிரிவில் கடமையாற்றும் பெண் கிராம அலுவலரை கடத்திய மூவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 13 மாதச் சிறைத்தண்டனை விதித்து, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், கிராமஅலுவலரின் சகோதரனை தாக்கி, அவருடைய 3 பற்களை உடைத்தமைக்காக ஒரு பல்லுக்கு 1 இலட்சம் ரூபாய் வீதம் 3 பற்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி குறித்த கிராமஅலுவலர், தனது சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் அலுவலகத்துக்குச் சென்றபோது, வாகனத்தில் வந்தவர்கள் இவர்களை மறித்து, சகோதரனை அடித்துவிட்டு கிராமஅலுவலரை இலக்கத்தகடற்ற வாகனத்தில் கடத்திச் சென்றனர்.

இந்நிலையில், கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர், இலக்கதகடு மறைக்கப்பட்ட துணி காற்றில் விலகியபோது, இலக்கத்தகட்டின் இலக்கத்தைக் குறித்து கொடிகாமம் பொலிஸாரிடம் கையளித்தார்.இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், கடத்தப்பட்ட வாகனம் புதுக்குடியிருப்புப் பகுதியால் சென்று கொண்டிருந்த போது, புதுக்குடியிருப்பு பொலிஸாரால் மடக்கிப்பிடிக்கப்பட்டது.

இதையடுத்து, வாகனத்தில் மயங்கிய நிலையில் இருந்த பெண் கிராமஅலுவலர் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், வாகனத்தில் இருந்து 5 பேரையும் பொலிஸார் கைது செய்தனர்.குறித்த பெண் கிராமஅலுவரை, திருமணம் செய்யுமாறு நபர் ஒருவர் தினமும் அச்சுறுத்தி வந்ததாகவும் இதனாலே​யே அவர் கடத்தப்பட்டதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, இவர்களில் வான் சாரதியும் பிறிதொரு நபரும் இந்தச் சம்பவத்துடன் தொடர்பற்றவர்கள் என வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.மிகுதி 3 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில், புதன்கிழமை (12), இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.

court-720x480

Related posts: