பாபர் மசூதி விவகாரம் – லக்னோ சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Wednesday, September 30th, 2020

இந்தியாவின் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரையும் விடுவித்து லக்னோ சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, 1992 இல் இடிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக, இரண்டு வழக்குகள் தொடரப்பட்டன.

மசூதியை இடித்ததாக, இலட்சக்கணக்கான பெயர் தெரியாத, கரசேவகர்கள் மீது, லக்னோவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மசூதியை இடிக்க சதி திட்டம் தீட்டியதாக, அத்வானி உள்ளிட்டோர் மீது, ரேபரேலி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

எனினும் பின்னர் அத்வானி உள்ளிட்டோரை வழக்குகளில் இருந்து விடுவித்து, நீதிமன்றம், 2001 இல் தீர்ப்பு அளித்தது. அதை, அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010ஆம் ஆண்டில் உறுதி செய்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அத்வானி உள்ளிட்டோர் மீதான வழக்கை விசாரிக்கும் படி, 2017 இல் உத்தரவிட்டது. மேலும், ரேபரேலியில் உள்ள வழக்கை, லக்னோ சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது. இரண்டு ஆண்டுகளுக்குள் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. எனினும் இந்தக் காலக்கெடு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில், பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்பட்டது என்பதற்கு போதுமான ஆதாரமில்லை. இந்த வழக்கில், குற்றச்சாட்டுகளை போதிய ஆதாரத்துடன் சி.பி.ஐ., நிரூபிக்கவில்லை. குற்றஞ்சாட்டப்பட்ட 32 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மசூதியை இடிக்கவில்லை. அவர்கள் தான் இடிக்கவிடாமல் தடுத்தனர். இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, அத்வானி உட்பட, 32 பேரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டு இருந்தார். வினய் கத்தியார், தரம்தாஸ், வேதாந்தி, லாலு சிங், சம்பத் ராய், பவன் பாண்டே உள்ளிட்ட 26 பேர் நேரில் ஆஜராகினார்கள். அத்வானி, ஜோஷி, கல்யாண் சிங், உமாபாரதி, சதிஷ் பிரதான், கோபால் தாஸ் ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜரானார்கள்.

தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு, நீதிமன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அத்துடன் நீதிமன்றம் வழியாக செல்லும் ஏராளமான வாகனங்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: