பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று மாலை பிரதமருடன் விசேட சந்திப்பு !

Tuesday, February 23rd, 2021

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இன்று மாலை 4.15 மணிக்கு பாகிஸ்தான் பிரதமர் இலங்கையை வந்தடையவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மாலை 6 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்திக்கவுள்ளதுடன், அதன் பின்னர் இருவரும் கூட்டறிக்கை வெளியிடவுள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமர் நாளையதினம் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளதுடன், அதனையடுத்து வர்த்தகம் மற்றும் முதலீட்டு மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

முன்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில், அவரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளதுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின், இந்த ஆண்டிற்கான முதலாவது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயமாகவும் இது அமைந்துள்ளது.

அத்துடன் முக்கியமாக ஆடை மற்றும் அணிகலன், மருந்துப் பொருட்கள், விவசாய உணவுப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், இரத்தினங்கள் மற்றும் நகைகள், வாகனப் பாகங்கள், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், நிர்மானப் பொருட்கள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்கள் போன்றவற்றிலான பாகிஸ்தானின் வர்த்தகத் தலைவர்களைக் கொண்ட ஒரு உயர் அதிகாரமுடைய வர்த்தக மற்றும் முதலீட்டு தூதுக்குழுவுடன் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் மக்தூம் ஷா மெஹ்மூத் குரேஷி, பிரதமரின் வணிக ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத், வெளிவிவகார செயலாளர் சொஹைல் மெஹ்மூத் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் பிரதமர் இம்ரான் கானுடன் இந்த விஜயத்தின் போது இணைந்திருப்பர் எனவும் வெளிவிகார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: