நீர்த்தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

Saturday, April 29th, 2017

வடக்கு கிழக்கு பகுதிகளில் அடுத்துவரும் சில மாதங்களுக்கு மழை பெய்யும் சாத்தியப்பாடுகள் குறைவாகக் காணப்படுவதாகவும், இதன் காரணமாக ஏற்படப்;போகும் நீர்த்தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் பொதுமக்களுக்கு வளிமண்டலத் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

மே மாத நடுப்பகுதியில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி ஆரம்பிக்கவுள்ள போதிலும் வடக்கு கிழக்கு பகுதிகளில் ஒக்டோபர் வரையில் மழை பெய்யக் கூடியதான சாத்தியப்பாடுகள் மிக மிக அரிதாகவே காணப்படுவதாகவும், வட கிழக்கு பருவப் பெயர்ச்சி ஆரம்பிக்கும் வரையில் மழை பெய்யக் கூடியதான சாத்தியங்கள் காணப்படவில்லையென்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் மழைக்கான சந்தர்ப்பங்கள் மிகவும்; குறைவாகக் காணப்படுகின்ற நிலையில் எதிர்வரும் நாட்களில் மக்கள் மட்டுமன்றி கால்நடைகளும் குடிநீருக்காக அலைந்து திரியவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்.

அத்துடன் குழந்தைகள்; சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வரட்சி மற்றும் வெப்பம் காரணமாக பல்வேறு தொற்றுநோய் தாக்கங்களுக்கும் முகங்கொடுக்க வேண்டிய அவலநிலையையும் எதிர்கொள்ள வேண்டிய பாதகமான நிலைமைகளும் எற்பட வாய்ப்புள்ளது.

குறிப்பாக வடக்கு கிழக்கில்; மக்கள் மீளக் குடியமர்ந்துவரும் பகுதிகளிலும், வீடமைப்புத் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு இடங்களிலும், தற்காலிக குடியிருப்புகளிலும் வாழ்ந்துவரும் மக்கள் நீரைப் பெற்றுக்கொள்வதில் பாரிய இடர்பாடுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வடக்கின் சில பகுதிகளில் தற்போது நிலவிவரும் கடும் வெப்பநிலையை அடுத்து நீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக மக்கள் போத்தலில் அடைக்கப்பட்டுள்ள நீரை அதிக விலைகொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டியுள்ளதாகவும், இது மக்களின் நீர்த் தேவையை முழுமையாக நிறைவு செய்ய முடியாமல்போகும் நிலையையே அதிகமாக ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒக்டோபர் மாதம் வட கிழக்கு பருவப் பெயர்ச்சி ஆரம்பமாகும் வரையில் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்தமாறும், இவ்வறிவுறுத்தலை வடக்கு கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கட்டாயமாக பின்பற்றுவதனூடாகவே ஏற்படப்போகும் நீர்த்தட்டுப்பாட்டை ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்த முடீயுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, வரட்சியான காலப்பகுதியில் தோட்டக்காணிகளுக்கு நீர் பாய்ச்சுவதோ, நீரினைப் பாவித்து முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதையோ தற்காலிகமாக இடைநிறுத்துவதே நல்லதெனவும் துறைசார்ந்த நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts: