நாட்டின் சுகாதார சேவையை மேம்படுத்தி பொருளாதார முன்னேற்றத்திற்காக அதனை வலுவாக பயன்படுத்த வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Saturday, March 23rd, 2024

இந்நாட்டில் பயிற்றுவிக்கப்படும் 100 தாதியர்களில் 30 – 40 பேர் வரையிலானவர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றனர் என்றும், இதே நிலை தொடர்வது சிறந்ததல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் உலகின் உயர்வான சுகாதார சேவையை கொண்டிருக்கும் எமது நாட்டின் சுகாதார துறையை மேம்படுத்தி அதனை பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்திக்கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

நெதர்லாந்து அரசாங்கத்தின் DRIVE இலகுக் கடன் உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர விபத்து மற்றும் சிகிச்சை பிரிவின் புதிய கட்டிடத்தை மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்காக நேற்று (22) இடம்பெற்ற நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். 

மேலும் வைத்திய மற்றும் தாதியர் சேவைக்காக  பயிற்றுவிக்கப்படுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்திடம் தான் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், அதற்கான வசதிகளை மேம்படுத்த வேண்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தேசிய வியாபார முகாமைத்துவ பாடசாலையான (NSBM)மற்றும் பசுமை பல்கலைக்கழகத்திற்கான வைத்தியசாலை ஒன்றை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் லயிசியம் வைத்தியசாலையும் அதற்கான கோரிக்கையை விடுத்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அதேபோல் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களையும் வைத்திய துறைக்குள் உள்வாங்கி நவீன வைத்திய முறைமைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

யாழ். பருத்தித்துறை வைத்தியசாலைக்கு புதிய கட்டிடமொன்றை நிர்மாணித்தமைக்காக  நெதர்லாந்து அரசாங்கத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்தார்.

பருத்தித்துறை வைத்தியசாலையின் புதிய அவிருத்திக்காக நெதர்லாந்தின் DRIVE இலகுக்  கடன் முறையின் கீழ் 04 பில்லியன் ரூபாய் வழங்கப்பட்டிருப்பதோடு, அதனால் வைத்தியசாலையின் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


இருக்கின்ற பிரச்சினைகளை விடுத்து எழுந்தமானதாக புதிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும் முகமாக ஆளுநர் கருத்த...
அரச தலைவர் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற வன்முறைப் போராட்டங்கள் தொடர்பில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்...
ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை - கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!