நாட்டின் சனத்தொகையில் 17 இலட்சம் பேருக்கு கொரோனாத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது – சுகாதார அமைச்சு!

Tuesday, June 1st, 2021

நாட்டின் சனத்தொகையில் 17 இலட்சம் பேருக்கு கொரோனாத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதில் ஏழு இலட்சத்து 40 ஆயிரம் பேருக்கு சைனோபாம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. ஒன்பது இலட்சத்து 25ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு முதலாவது கொவிஷில்ட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. 26 ஆயிரத்து 821 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளது.

மேல் மாகாணம் உட்பட நாட்டின் 9 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத்திட்டம் இடம்பெறுகின்றது நாட்டுக்குத் தேவையான மேலும் 34 லட்சம் தடுப்பூசிகளை அரசாங்கம் கொள்வனவு செய்ய இருக்கிறது. அடுத்த வாரமளவில் நாட்டுக்கு பத்து இலட்சம் சீனாபோம் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன.

இதேவேளை நாட்டில் மேலும் இரண்டாயிரத்து 882 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். 39 கொரோனா மரணங்களும் புதிதாக இடம் பெற்றுள்ளன. இதில் நேற்றைய தினத்தில் மாத்திரம் நான்கு கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ளன.

இதன்மூலம் இலங்கையில் இதுவரை இடம்பெற்ற கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1480 ஆகும். நாட்டில் இதுவரை இனங்காணப்பட்ட மொத்த ஒருநாள் நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு  இலட்சத்து 86 ஆயிரத்து 364 வரை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: