நாடாளுமன்ற தேர்தல் முறையில் மாற்றங்கள் செய்வது அவசியம் – விரைவாக முன்னெடுக்குமாறும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன வலியுறுத்து!

Saturday, October 22nd, 2022

நாடாளுமன்ற தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை தாமதிக்காமல் முன்னெடுக்க வேண்டுமென, பிரதமர் தினேஷ் குணவர்த்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (21) நடைபெற்ற அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர் –  நாடாளுமன்ற தேர்தல் முறையில் மாற்றம் மேற்கொள்ளப்படும் என்று ஏற்கனவே ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். இது தொடர்பான சட்டமூலத்தை விரைவில் கொண்டு வருவாகவும் ஜனாதிபதி அதன்போது தெரிவித்திருந்தார்.

ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவில்லை. எவ்வாறாயினும் விரைவில் அந்த தேர்தல் திருத்தத்தை கொண்டு வர வேண்டும். அத்துடன் நிறைவேற்றுத் துறை நாடாளுமன்ற முறை தொடர்பிலும் பேசப்பட்டிருந்தது.

225 பேரை கொண்ட நாடாளுமன்றமே தற்போதுள்ளது. அதனை அதிகரிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

அதேவேளை 22 ஆவது திருத்தத்தை கொண்டு வருவதன் மூலம், பிரச்சினைகள் தீர்ந்துவிடப்போவதில்லை. அதற்கப்பால் ஏனைய நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் அவசியமாகும்.

கடந்த மே மாதம் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் குறிப்பிட்ட அவர், மே 09 வன்முறை சம்பவத்தில் உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான நஷ்டஈட்டை, பத்து மில்லியன் ரூபா வரையில் அதிகரிக்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் பொறுப்பு நாடாளுமன்றத்துக்கு உண்டு. இதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

மேலும் – மக்கள் நலனையும் நாட்டின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக நாம் எந்தளவுக்கு பாடுபட்டுள்ளோம் என்பதனை சபாநாயகரும் நானும் அறிவோம்.

கொலைகளைச் செய்யும் போது சிரிக்கலாம். ஆனால் அது தொடர்பில் அழுகின்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நடைபெற்ற வன்முறை சம்பவங்களில், படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரளவுக்கு வழங்கும் நட்ட ஈட்டை 10 மில்லியன் ரூபா வரையில் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கு முன்னர் இருந்த 05 மில்லியன் ரூபா தொகையை 10 மில்லியனாக அதிகரித்துள்ளோம்.

கொலை தொடர்பில் கண்டனங்களை வெளியிட்டால் மட்டும் போதாது. அவரின் குடும்பத்தினருக்காக செய்ய வேண்டியவற்றை மேற்கொள்ள வேண்டியதும் அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: