நாடாளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூடும் – நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் டிக்கிரி கே.ஜயதிலக அறிவிப்பு!

Saturday, March 18th, 2023

நாடாளுமன்றத்தை எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூட்டுவதற்கு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் டிக்கிரி கே.ஜயதிலக தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாடாளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 9.30 மணிக்கு கூடவுள்ளதுடன், மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சட்டக்கல்விப் பேரவைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2208/13ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட விதிகள் விவாதமின்றி அங்கீகரிக்கப்படவுள்ளன.

இதன் பின்னர் பி.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் நாடாளுமன்றத்தினதும் சிறப்புரிமைகள் மீறப்படுதல்  தொடர்பில் விசாரிப்பதற்கும் அது தொடர்பில் பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்தல் பற்றிய தீர்மானம் அங்கீகரிக்கப்படவுள்ளது.

அத்துடன், 2021 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் வெளியிடப்பட்ட 2313/47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுக்கப்படவிருப்பதாக பதில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதம் நடைபெறும்.

மார்ச் 22 ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணிவரை வாய்முல விடைக்களுக்கான கேள்விக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள், 2021 இன் 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழான 06 தீர்மானங்கள் மற்றும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2312/75  இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்ட தீர்மானம் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

மார்ச் 23ஆம் திகதி மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணிவரை வாய்முல விடைக்களுக்கான கேள்விக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க, இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல்  சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2308/08 ஆம் இலக்க வர்த்மானி பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி மற்றும், 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2310/30 ஆம் இலக்க வர்த்தமானி பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், அரசின் பல்வேறு சட்ட நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகள் தொடர்பான மூன்று பிரேணைகளை முன்வைப்பதற்கும், தனிநபர் சட்டமூலமாக இலங்கை பட்டய போக்குவரத்து நிறுவனம் மற்றும் ஷைலி கல்வி அறக்கட்டளையை கூட்டிணைப்பதற்கான தனியார் உறுப்பினர் சட்டமூலங்களை இரண்டாவது வாசிப்புக்கு முன்வைக்கவும் இங்கு இணங்கப்பட்டது.

இதன் பின்னர் பி.ப 5.00 மணி முதல் 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதம் நடைபெறும்.

மார்ச் 24ஆம் திகதி மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் தொடர்பான அனுதாபப் பிரேரணை முன்வைக்கப்படும். இதற்கு அமைய மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌரவ திருமதி லரின் பெரேரா, கௌரவ ரெஜினோல்ட் குரே, கௌரவ புத்திக குருகுலரத்ன , கௌரவ முத்து சிவலிங்கம் ஆகியோர் குறித்த அனுதாபப் பிரேரணை எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: