திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மாகந்துர மதூஷ் துப்பாக்கிச் சூட்டில் பலி!

Tuesday, October 20th, 2020

பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தின் போது கொல்லப்பட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மாகந்துர மதூஷ் என்ற சமரசிங்க ஆராச்சிலாகே மதூஷ் லக்ஷித இதுவரை காலம் காஞ்சிபானை இம்ரானுக்கு சொந்தமான போதைப்பொருள் பரிமாற்றகத்தில் இருந்தே கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மறைத்து வைத்திருந்த போதைப்பொருட்களை மீட்பதற்காக மாகந்துரே மதூஷ் மாளிகாவத்தை – எப்பல்வத்தை பகுதியில் உள்ள லக்ஸித செவன வீடமைப்பு தொகுதிக்கு இன்று அதிகாலை அழைத்து செல்லப்பட்டார்.

இதன்போது போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த வீட்டில் இருந்த தரப்பினர் காவல்துறையினர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர்.

இதனையடுத்து பதிலுக்கு காவல்துறையினரும் பரஸ்பரப துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர். இதன்போது மாகந்துரே மதூஷ் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் மாக்கந்துரே மதூஷ் அடையாளம் காட்டிய இடத்தில் இருந்து 220 மில்லியன் ரூபா பெறுமதியான 22 கிலோகிராம் ஹெரோயின், 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் பாதாள உலக குழு உறுப்பினர்கள் பயன்படுத்திய உந்துருளி என்பனவும் காவற்துறையினால் கையகப்படுத்தப்பட்டன.

பாதாள உலககுழுவின் தலைவரும் போதைப்பொருள் கடத்தற்காரருமான மாக்கந்துரே மதூஷ், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் டுபாயில் கைதுசெய்யப்பட்டார்.

அங்கு இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றில் வைத்து அவரும் அவருடன் மேலும் 25 பேர் வரையிலும் கைது செய்யப்பட்டு, ஒவ்வொருவராக நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.

Related posts: