ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசு ஒருபோதும் தமிழ் மக்களை ஏமாற்றாது – அரசை தமிழர்கள் நம்ப வேண்டும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Monday, June 28th, 2021

கடந்த நல்லாட்சி அரசுதான் தமிழ் மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்தியது என சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசு ஒருபோதும் தமிழ் மக்களை ஏமாற்றாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தமிழ் மக்களை வைத்து அரசியல் நடத்தாது, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் அரசு அதீத அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் –

மரண தண்டனை கைதி துமிந்த சில்வாவை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ததை மூடிமறைப்பதற்காகவே தமிழ் அரசியல் கைதிகளில் 16 பேரை ஜனாதிபதி விடுதலை செய்தார் என்று எதிரணியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை அரசு அடியோடு நிராகரிக்கின்றது.

புதிய அரசு பதவியேற்ற நாள் தொடக்கம் துமிந்த சில்வாவைப் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு கொழும்பு மாவட்ட மக்கள், ஆளும் கட்சியினர் மட்டுமல்ல எதிரணியினர் கூட ஜனாதிபதியிடம் எழுத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

கடந்த ஆட்சியில் அரசியல் அழுத்தம் காரணமாகவே துமிந்த சில்வா மரணதண்டனை கைதியானார்.

அதேநேரம் தண்டனைக்காலம் நிறைவடையவுள்ள நிலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளே விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும், இது தமிழர்களை ஏமாற்றும் செயல் என்றும் தமிழ் அரசியல்வாதிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களையும் அரசு அடியோடு நிராகரிக்கின்றது.

கடந்த நல்லாட்சி அரசுதான் தமிழ் மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்தியது. கோட்டாபய அரசு ஒருபோதும் தமிழ் மக்களை ஏமாற்றாது. தமிழ் மக்களை வைத்து அரசியல் நடத்தாது.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் அரசு அதீத அக்கறை கொண்டுள்ளது. அதை வெளிப்படுத்தும் முதல் சமிக்ஞையாகவே தமிழ் அரசியல் கைதிகள் 16 பேரை பொது மன்னிப்பின் கீழ் ஜனாதிபதி விடுதலை செய்துள்ளார்.

சிறையிலுள்ள ஏனைய அரசியல் கைதிகளையும் விடுவிக்கும் நடவடிக்கையை அரசு முன்னெடுக்கும். அதேவேளை, தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கும். எனவே, அரசை தமிழ் மக்கள் நம்ப வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: