சிறுவர் தொடர்பான முறைப்பாடுகளில் 40,668 முறைப்பாடுகளுக்கு இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை – கோப் குழு தகவல்!

Tuesday, February 16th, 2021

2011 ஆம் ஆண்டுமுதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி வரையில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்றுள்ள 89 ஆயிரத்து 405 முறைப்பாடுகளில் 40 ஆயிரத்து 668 முறைப்பாடுகளுக்கு இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை என அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்ற குழுவான கோப் குழுவில் தெரியவந்துள்ளது.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற கோப் குழு கூட்டத்தின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதேநேரம் கோப் குழுவின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையால் 2016, 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுளுக்கான அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

அத்துடன் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்காக 3 ஆயிரத்து 165 பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றில் தற்போது 2 ஆயிரத்து 392 குழுக்கள் மாத்திரமே இயங்கும் நிலையில் காணப்படுகின்றன.

இந்நிலையில் முறைப்பாடுகள் தொடர்பிலான நடவடிக்கையை மேற்கொள்வதற்காக சட்டத்தை அமுலாக்கும் பிரிவில் ஒரு குழு மாத்திரமே கடமையாற்றி வருகின்றமை கவலைக்குரிய விடயம் எனவும் கோப் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: