கொளுத்தும் வெயில்: மண் பானைக்கு மவுசு அதிகரிப்பு!

Thursday, April 19th, 2018

நாட்டின் பல பாகங்களிலும் அதிகரித்த வெப்பம் காரணமாக மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலைமையைச்  சமாளிப்பதற்கு பல வழிகளை  மக்கள் தேடிவரும் நிலையில் மண் பானைகளுக்கான மவுசு அதிகரித்துள்ளதைக் காண முடிகின்றது.

குழாய் பொருத்தப்பட்டு நவீன அவதாரத்துடன் மண் பானைகளும் சந்தைகளுக்கு வந்துள்ளன. இந்நிலையில் தென்மராட்சியில் பானை விற்பனை சூடு பிடித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

வெப்பமான காலங்களில் குளிர்ச்சியான குடிதண்ணீரைப் பெற முன்னோர்கள் மண்பானைகளையே பயன்படுத்தினர்.

மண்பானைகளில் சேமிக்கப்படும் குடி தண்ணீர் குளிர்ச்சி நிறைந்து காணப்படும். காலப்போக்கில் இந்த வழக்கம் மெல்ல மெல்ல மறைந்தது. பிளாஸ்ரிக் குடங்களின் வருகையுடன் மண்பானைகளின் பாவனை இல்லாமல் போனது என்றே கூறலாம்.

போத்தல் தண்ணீர் விற்பனைக்கு வந்ததும் இப்படியான இயற்கையான குளிர்விக்கும் முறை அனைவருக்கும் மறந்துபோனது.

இந்நிலையில் நாட்டில் தற்போது கடும் வெப்பமான காலநிலை நிலவுகின்றது. மக்கள் வெயிலைத் தாங்க முடியாது பழைய முறைகளை மீண்டும் கையிலெடுக்கத் தொடங்கியுள்ளனர். மண்பானைகளைத் தேடிக் கொள்வனவு செய்யவும் தொடங்கியுள்ளனர். விற்பனை அதிகரித்துள்ளதால் உள்ளுர் முயற்சியாளர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.

வழக்கமாக பொங்கல் பண்டிகையின்போதே மண் பானை விற்பனை நடக்கும். அதனால் தை மாதத்திலேயே அதிக பானைகள் உற்பத்தி செய்வோம். தற்போது கடும் வெப்பமான காலநிலை காணப்படுகின்றது. மக்கள் மண் பானைகளை நாடுகின்றனர். அதனால் மண் பானைகளை அதிகமாகத் தயார் செய்கின்றோம்.

குழாய் பொருத்தப்பட்ட நவீனப்படுத்தப்பட்ட மண் பானைகளையும் உற்பத்தி செய்கின்றோம். அவற்றுக்குத் தனி மவுசு இருக்கின்றது என மண் பானை தயாரிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts: