கொரோனா சந்தேகம்: இன்றும் யாழ்.போதனா வைத்தியசாலையில் 6 பேர் அனுமதி!

Monday, April 13th, 2020

கொரோனா சந்தேகத்தின் பேரில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 6 பேர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

நேற்றய தினம் 4 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு பரிசோதனை நடாத்தப்பட்டு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் கொரோனா சந்தேகத்தில் 6 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அவர்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் மாலையில் பரிசோதனை அறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து இன்றைய தினம் 60 பேர் வெளியேறியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் 15 பேர் வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்குத் திரும்பியவர்கள் என்பதுடன் அவர்கள் கல்கந்த புனானை தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் பண்டாரகம பகுதியிலுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 20 பேரும் இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

அத்துடன் , நீர்கொழும்பு வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் 25 பேரும் இன்று தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்து வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆயிரத்து 506 பேர் தொடர்ந்தும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நாடாளவிய ரீதியில் விசேட நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை கைது செய்யும் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை மாலை 6 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிவரையிலான 24 மணித்தியாலங்களுக்கு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடாளவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: