குடாநாட்டு மக்களே!  சமுதாய உணர்வுடன் சற்றுச் சிந்தியுங்கள் !!

Saturday, May 5th, 2018

யாழ். குடாநாடு கடும் வறட்சியை எதிர்கொண்டு வருகின்றது. வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளதால் மக்களின் இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெப்ப நோய்களும் அவர்களைப் பீடித்து வருகின்றன.

குடாநாட்டின் ஒரு பகுதியில் வசிக்கின்ற தீவக மக்கள் மிகக் கடுமையான தண்ணீர், குடிதண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றனர். அங்குள்ள கிணறுகளும், நீர் நிலைகளும் வற்றிய நிலையில் காணப்படுவதால் குடி தண்ணீருக்கு மட்டுமல்லாது தமது ஏனைய தேவைகளுக்கும் நீரைப் பெறமுடியாது அவலங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அங்குள்ள பயன்தரு மரங்கள் கருகி அழிந்த நிலையில் காணப்படுகின்றன.

குடாநாடு நிலத்தடி நீரையே ஒரேயொரு நீர் ஆதாரமாகக் கொண்டிருப்பதால் மழை பெய்யாத நிலையில் அதைத் தொடர்ந்து நம்பியிருக்க முடியுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இவ்வாறிருக்க குடாநாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டிய கட்டாய நிலையொன்று உருவாகி விட்டது.

இந்த வறட்சியான காலப்பகுதியிலும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கு அவர்களுக்குத் தெரியவில்லை. வழக்கம் போல அதிகளவு நீரை விரயமாக்கி வருகின்றனர். தமது வளவுகளில் உள்ள கிணற்று நீரைப் பல்வேறு வகையிலும் அவர்கள் வீணாக்கி வருவதை அவதானிக்க முடிகின்றது. இதனால் நிலத்தடி நீருக்கு ஏற்படுகின்ற பாதிப்புத் தொடர்பாக இவர்கள் சிந்திப்பதில்லை. நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுவிட்டால் குடாநாடு மிகப் பயங்கரமான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையொன்று உருவாகிவிடும்.

குடாநாட்டு மக்களே சமுதாய உணர்வுடன் சற்றுச் சிந்தியுங்கள். நீரைத் தேவையற்ற வகையில் விரயம் செய்வதால் முழுக் குடாநாடும் பாதிக்கப்பட்டுவிடும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நீரைச் சேமித்துக் குடாநாட்டைப் பாதுகாப்போம்.

Related posts: