காணாமல்போனோரின் உறவினர்களுக்கு பரிகாரம் வழங்க எவ்வித எதிர்ப்பும் கிடையாது – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிப்பு!

Sunday, April 4th, 2021

காணாமல்போனோரின் உறவினர்களுக்கு பரிகாரம் வழங்குவதாக இருந்தால், அதற்கு எவ்வித எதிர்ப்பும் இருக்கப்போவதில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, காணாமல் போனோர் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அலுவலகம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் அலுவலகத்தை நீண்டகாலத்திற்கு கொண்டு செல்ல முடியாது எனவும் அதனை இரத்து செய்ய நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்த அலுவலகத்தை தாம் நியமித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ஜனநாயக சமூகத்தில் தொடர்ந்தும் காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் இருக்குமென தெரிவிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அன்று இடம்பெற்ற விடயங்கள் முற்றிலும் மாறுபட்டவையென்றும் யுத்தக்காலப் பகுதியென்பதால் நாளை என்பதே நம்பிக்கையற்ற நிலைமையாக அன்று இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்பட்ட விடயதானங்கள் பல இருந்தனவென்றும் அது நாட்டில் தொடருமாக இருந்தால் இதனை ஜனநாயக நாடென கூற முடியாதென்றும் தெரிவித்திருந்தார்..

முன்பதாக குறித்த காணாமல் போனார் விடயம் தொடர்பில் பரிகாரம் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக .சில வாரங்களுக்கு முன்னர் யாழ் மாவட்ட செயலகத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டதுடன் அது தொடர்பிலான செயற்பாட்டுக் குழு ஒன்றையும் நியமித்திருந்தார்.

அத்துடன் குறித்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் காணாமல் போனோரின் உறவுகளுகிகு கிடைக்க வேண்டிய பரிகாரங்கள் தொடர்பிலான எழுத்துமூல அறிக்கை ஒன்றையும் ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சமர்ப்பித்திருந்ததுடன் பரிகாரம் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: