கல்வியமைச்சின் சுற்றறிக்கைக்கமைவாகவே அதிபர்கள் செயற்பட வேண்டும் – பாடசாலை அதிபர்களிடம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கோரிக்கை!

Monday, July 27th, 2020

ஆரம்பமாகியுள்ள  பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் சமுகமளிப்பது தொடர்பில் கல்வியமைச்சின் சுற்றறிக்கைக்கமைவாகவே அதிபர்கள் செயற்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் –

11.12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கான ஆசிரியர்கள் மாத்திரமே இன்று திங்கட்கிழமைமுதல் வரும் வாரத்தில் சமுகமளிக்க வேண்டும். இதர ஆசிரியர்கள் அனைவரும் ஓகஸ்ட் 10 ம் திகதிக்கு பின்னரே பாடசாகைளுக்கு சமுகமளிக்க வேண்டும் எனவும் கல்வியமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இதற்கு மாறாக சில அதிபர்கள் அனைத்து ஆசிரியர்களும் பாடசாலைக்கு கட்டாயம் வரவேண்டும் என ஆசிரியர்களை அழைப்பது முற்றிலும் தவறான செயல்.

பாடசாலைகளில் ஒன்று கூடுதலை தவிர்ப்பதற்காகவும் சமுக இடைவெளியை பேணுவதற்காகவும், பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே கல்வி அமைச்சு இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

தற்போதுள்ள சூழ்நிலைக்கேற்ப கல்வி அமைச்சின் தீர்மானமே இது. 11.12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கு கற்பிக்க நேர அட்டவணை வழங்கப்பட்ட ஆசிரியர்கள் மாத்திரமே  பாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டும்.

இம்மாதம் 6 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பித்தபோதிலும் கல்வி அமைச்சின் அறிவுறுத்தல்களை பின்பற்றாத சூழ்நிலை காணப்பட்டது.

எனவே கல்வி அமைச்சு வழங்கியுள்ள அறிவுறுத்தல்களுக்கமைய பாடசாலைகளை நடத்துவதற்கான அவசியமான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு நாங்கள் கல்வி அமைச்சிடம் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

Related posts: