ஏப்ரல் 21 தாக்குதல் விவகாரம் : முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடும் எச்சரிக்கை!
Thursday, September 24th, 2020ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்களுக்கு மறுப்பு அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அவரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் கொழும்பு மறைமாவட்டத்தில் உள்ள உதவி ஆயர்களுக்கும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரத்தியேக செயலாளர் சமீர டி சில்வா, செப்டம்பர் 20ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ உண்மைக்குப் புறம்பான தகவல்களை முன்வைத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பேராயர் முன்னதாகவே அறிந்திருந்ததாக தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து கொழும்பு பேராயர் இல்லத்தின் மூன்று ஆயர்களினால் கடந்த 20 ஆம் திகதி ஊடக அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.
இதனையடுத்து, ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஹேமசிறி பெர்ணான்டோ அளித்த சாட்சியங்களை மையப்படுத்தி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை அவமதிப்பதாக தாம் கருதுவதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அய்ஷா ஜினசேன தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரத்தியேக செயலாளர் மற்றும் கொழும்பு பேராயர் இல்லத்தின் ஆயர்கள் மூவருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு விடுத்தது.
அதனடிப்படையில், அனைவரும் இன்று காலை 10.30 மணியளவில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|