ஏப்ரல் 20இல் தினத்தில் பாடசலைகளை ஆரம்பிக்க முடியாது – அரசாங்கம் !

Thursday, April 2nd, 2020

இம்மாதம் 20 ஆம் திகதி நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்த்திருந்த போதிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து நாட்டின் தற்போதைய நிலைமை ஆரோக்கியமானதாக இல்லாத காரணத்தினால் முன்பு தெரிவிக்கப்பட்ட தினத்தில் பாடசலைகளை ஆரம்பிக்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கையில்,

நாட்டின் தற்போதுள்ள நிலைமைகளில் அரச பாடசாலைகள் எப்போது ஆரம்பிக்கப்படும் என்ற சரியான திகதியை அறிவிக்க முடியாதுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைமைகள் தொடர்ந்தும் நீடிக்கின்ற காரணத்தினால் இப்போதைக்கு பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாதுள்ளது.

அதேபோல் பல்கலைக்கழக அனுமதிக்கான மாணவர்களின் விண்ணபங்களை பெற்றுக்கொடுக்கவும் சிரமமாக உள்ளது. எவ்வாறு இருப்பினும் அரச பாடசாலைகள் எப்போது ஆரம்பிக்கப்படுகின்றதோ அதில் இருந்து இரண்டு வார காலத்திற்குள் பல்கலைக்கழக அனுமதிக்கான மாணவர்களின் விண்ணப்பப்பத்திரம் பெற்றுக்கொள்ளக்கூடிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

அதேபோல் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் நிதியும் கடந்த மாதம் வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டது.

இதனை வழங்க அரச நிதியில் திறைசேரியில் இருந்து 200 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டது. எவ்வாறு இருப்பினும் இப்போது திறைசேரியிலும் நிதி பற்றாக்குறை நிலவுகின்ற காரணத்தினால் அரச வங்கிகளின் மூலமாக நிதியை பெற்று மாணவர்களின் கணக்குகளுக்கு நிதியை செலுத்தியுள்ளோம்.

ஆகவே கடந்த மாதம் தாமதமான புலமைப்பரிசில் நிதி இப்போது வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கல்விக்கான ஊடக நிகழ்வுகள் நடத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் வீடுகளில் இருந்தே கல்வி கற்றும் விதத்தில் கல்விக்கான ஊடகம் ஒன்று அவசியம் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கமைய அரச தொலைக்காட்சியில் அதற்கான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படவுள்ளது என்றார்

Related posts: