எவருக்கும் ஆதரவு தரப்போவதில்லை – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

Wednesday, August 28th, 2019

ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் தற்போது வழங்கும் வாக்குறுதிகளினால் மக்களின் துயரங்கள் நீங்காது எனவும் அந்த வாக்குறுதிகளால் கிடைக்க போகும் பிரயோசனங்கள் எதுமில்லை எனவும் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள இத்தாலிய ஆயர்கள் சபையின் தலைவருடன் இன்று தலதா மாளிகைக்கு சென்றிருந்த போதே கர்தினால் இதனை கூறியுள்ளார்.

தான் அதிகாரத்திற்கு வந்தால், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த ஆணைக்குழுவை நியமிப்பேன் என கோத்தபாய ராஜபக்ச கூறியிருந்தமை குறித்து செய்தியாளர் ஒருவர், கர்தினால் மெல்கம் ரஞ்சித்திடம் வினவியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள அவர் –

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சுயாதீன ஆணைக்குழுவை நியமிப்பதாக கூறினாலும் அவை வாக்குறுதிகள் மட்டுமே. அதிகாரத்தில் இல்லாதவர்கள் வழங்கும் வாக்குறுதிகளை விட ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் வழங்கும் வாக்குறுதிகள் முக்கியமானவை.

எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாக பேச நான் தயாரில்லை. இது சம்பந்தமான தீர்மானத்தை மக்கள் எடுப்பார்கள். ஈஸ்டரன்று நடந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் மனதை ஓரளவுக்கேனும் தேற்ற வேண்டுமாயின் சம்பவத்தின் உண்மையை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதனை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் கடமை.

எமக்கு ஏன் இப்படி செய்தனர் என மக்கள் என்னிடம் கேட்கின்றனர். இந்த மக்களுக்கு அதனை செய்வோம், இதனை செய்வோம் என்று கூறினாலும் அது குறித்து நம்பிக்கை கொள்ள முடியாது. ஆட்சி அதிகாரத்தில் இருப்போர் இது சம்பந்தமாக இதனை விட சிறந்த பதிலை வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பாக இது சம்பந்தமாக ஆணைக்குழுவை நியமிப்பது முக்கியமானது. இது தொடர்பாக ஜனாதிபதி கடிதம் ஒன்றை எழுதிய போதிலும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற அனைவரும் தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படவில்லை. இது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையின்படி செயற்படுவதாக கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளனர். எந்த கட்சிக்கும் சார்பில்லாத சுயாதீனமான நபர்களை கொண்ட, எவருக்கு எதிராகவும் சட்டத்தை அமுல்படுத்தக் கூடிய வலுவான ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் எனவும் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

Related posts: