எத்தகைய விமர்சனங்கள் வந்தாலும் இறக்குமதி கிடையாது – அமைச்சர் பந்துல குணவர்த்தன திட்டவட்டம்!

Wednesday, January 20th, 2021

எத்தகைய விமர்சனங்கள் வந்தாலும் மஞ்சள், கஜு, உழுந்து, மிளகு என எதனையும் இறக்குமதி செய்ய இடமளிக்கப்பட மாட்டாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிதி அமைச்சின் கீழ் இருக்கும் விசேட வியாபார பண்ட அறவீட்டுச் சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் –

நல்லாட்சி அரசாங்க காலத்தில் நாட்டின் தேசிய உற்பத்தியாளர்கள் பாதுகாக்கப்படவில்லை. ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கும் தேசிய பொருளாதாரத்துக்குமே முன்னுரிமையளித்து செயற்படுகின்றது.

இதனூடாக நுகர்வோருக்கும் உற்பத்தியாளருக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. சில சந்தர்ப்பங்களில் உற்பத்தியாளர்கள் பற்றி மாத்திரமே கதைக்கின்றோம். அதேபோன்று சில சந்தர்ப்பங்களில் நுகர்வோர் பற்றி மாத்திரமே கதைக்கின்றோம்.

உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திக்கு அதிக விலை கிடைப்பதையே எப்போதும் எதிர்பார்ப்பார்கள். உற்பத்தியாளர்களை விட எமக்கு வாக்களிக்கும் நுகர்வோர் தான் அதிகமாகும்.

நுகர்வோர் எப்போதும் குறைந்த விலையில் பொருட்களை பெற்றுக்கொள்ளவே எதிர்பார்க்கின்றனர். இரண்டு தரப்பினருக்கும் இடையில் ஒரு பிரச்சினையுள்ளது.

இருதரப்பினரையும் பாதுகாக்கும் வகையில்தான் அரசாங்கம் வரிக்கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். அதன் பிரகாரம்தான் விசேட வியாபாரப் பண்டங்களுக்கான வரிமுறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தேவையான நேரத்தில் குறித்த சட்டத்தை மறுசீரமைக்க முடியும் என்பதுடன், சட்டம் திருத்தப்பட்டு ஆறுமாதகாலத்திற்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுதேச உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நோக்கிலேயே விசேட வியாபாரப் பண்டங்களுக்கான வரிமுறைமை 2007ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் இந்த நாட்டின் இலட்சக்கணக்கான விவசாயிகளை பாதுகாக்க வேண்டியது கடமையும் பொறுப்புமாகும்.

75 – 80 ரூபாவுக்கு இடையில் பொன்னி சம்பா அரிசியை இறக்குமதி செய்து முழு சந்தையையும் நிறைக்க முடியும். இதை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய முடியும். வரி இல்லாது அரிசி விலையை குறைக்க முடியும்.  தற்போது எமது நாட்டில் அறுவடை காலமாகும்.மண்ணுடன் முட்டி மோதும் விவசாயிகளுக்கு கடனைக்கூட செலுத்திக்கொள்ள முடியாத சூழல் ஏற்படும்.

ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் ‘சுபீட்சமான நோக்கு’ என்ற கொள்கைக்கு அமைய தேசிய பொருளாதாரத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கும். அதனால் எத்தகைய விமர்சனங்கள் வந்தாலும் நாம் இலட்சக்கணக்கான விவசாயிகளின் பக்கம் நின்றுதான் தீர்மானங்களை எடுப்போம்.

அந்தவகையில் நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்தையும் உற்பத்தி செய்வதற்கான சலுகைகளை விவசாயிகளுக்கு செய்துகொடுப்போம். வடக்கு – கிழக்கில் உழுந்து, சோயா, மஞ்சள் என பல உற்பத்திகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தேசிய பொருளாதாரம் வளர்ச்சியடையும் போதே எமது நாட்டின் நிதிபலம் அதிகரிக்கும் என்பதுடன், மக்களின் வாழ்க்கைத்தரமும் உயர்வடையும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தையிட்டி ஆவளை பகுதியில் பிரதேச சபையினால் அமைக்கப்படவுள்ள மயானத்தை அமைக்க அனுமதி வழங்க வேண்டாம் - அரச...
வடபகுதி காணிப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு - எடுத்துச் செல்லப்பட்ட கோப்புக்கள் மீண்டும் யாழ்ப்பாணத்...
நட்புறவு மற்றும் தன்னம்பிக்கையுடன் எழுச்சி பெற்ற சீனாவினால் இன்று முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது...