உள்ளூர் சினிமா துறையை பாதுகாப்பதற்கு அரச தலையீட்டுடன் ஈராண்டு காலத்திற்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் பிரதமரின் தலைமையில் ஆராய்வு!
Saturday, January 9th, 2021கொரோனா தொற்றுக்கு மத்தியில் உள்ளூர் சினிமா துறையை பாதுகாப்பதற்கு அரச தலையீட்டுடன் ஈராண்டு காலத்திற்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பது தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது திரைப்பட தயாரிப்பு மன்றம், இலங்கை சினிமா இயக்குனர்களின் மன்றம், உள்ளூர் சினிமா கலைஞர்களின் கூட்டணி மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் திரைப்படத்துறை மிகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக திரைப்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் பிரதமருக்கு தெளிவுபடுத்தினர்.
அதன்போது 2021-2023 ஆம் ஆண்டின் பிரபல 25 திரைப்படங்களை திரையிடுவது குறித்தும், இந்த சவால்மிகுந்த காலப்பகுதியில் உள்ளூர் திரைப்படத் துறையை மேம்படுத்துவதற்கான நடைமுறை வேலைத்திட்டத்துடன் திரையரங்குகளின் தற்போதைய நிலை குறித்தும் பிரதமருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
திரையரங்கு உரிமையாளர்களின் மின்சார கட்டணத்தை அலகிடும் போது தொழில் வகை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு அக்கட்டணத்தை முன்னோக்கி கொண்டு செல்லல், பொழுதுபோக்கு வரியை ஈராண்டு காலத்திற்கு 5 வீதம் வரை குறைத்தல், விநியோக கட்டணங்களை நீக்குதல் அல்லது குறைத்தல், இது தொடர்பாக முடிவுகளை எடுக்க சிறப்புக் குழுவை நியமித்தல், திரைப்படத் தயாரிப்புக்கு 4 அல்லது 6 சதவீத வட்டிக்கு அரசு வங்கிகளிடமிருந்து கடன் பெறல், சலுகை அடிப்படையில் அரச மற்றும் அனைத்து ஊடகங்களிலும் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளல் என்பன குறித்து மேற்படி சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த திட்டங்கள் தொடர்பில் அந்தந்த நிறுவனங்கள் மற்றும் துறைகளுடன் ஆலோசித்து முடிவுகளை எடுக்குமாறு பிரதமர் அறிவுறுத்தினார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் துறைகளை தெளிவுபடுத்தி எதிர்காலத்தில் இந்த சலுகைகளை அமுல்படுத்துவது தொடர்பாக இறுதி முடிவுகள் எடுக்கப்படும்.
திரைப்பட தயாரிப்பாளராக பந்துல குணவர்தன அவர்களும், திரைப்பட இயக்குநராக அமைச்சர் சரத் வீரசேகர அவர்களும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.
000
Related posts:
|
|