உள்நாட்டு விவசாயிகளை வளப்படுத்தியுள்ளேன் – ஜனாதிபதி கோட்டபஜ ராஜபக்ச பெருமிதம்!

Sunday, March 14th, 2021

வெளிநாட்டு விவசாயிகளை வளப்படுத்திய பொருளாதாரக் கொள்கை மாற்றப்பட்டு, நாட்டில் பயிரிடக் கூடியவற்றை பயிரிடுவதன் மூலம் எமது விவசாயிகளை வளப்படுத்துவதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி கொட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இத்தகைய சூழலில், மனித உரிமைகள் பேரவை அரசாங்கத்திற்கு எதிரான அதிக எண்ணிக்கையிலான குற்றச்சாட்டுகளுடன் ஒரு அறிக்கையை சமர்ப்பிப்பதை தான் கண்டது இதுவே முதல் முறை என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

காலி மாவட்டத்தில் இடம்பெற்ற “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

மனித உரிமைகள் பேரவை எமக்கு எதிராக கொண்டு வந்த முன்மொழிவுக்கு கடந்த அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. அந்த நிலைப்பாட்டை நிராகரித்து, தற்போதைய அரசாங்கம் இணை அனுசரணையிலிருந்து விலகியது.

எம்.சி.சி ஒப்பந்தம் உட்பட நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் ஒப்பந்தங்களில் இருந்து முறையாக விலகி மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக்கு பதிலாக, எதிர்ப்பு தெரிவிக்க தனி இடம் வழங்கப்பட்டது. அதேபோன்று தேசியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு விவசாய பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலம் எமது விவசாயிகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்க்கட்சியினர் எதிர்க்கட்சி என்ற வகையில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியும். அவை உண்மைத் தகவல்களின் அடிப்படையில் இருக்க வேண்டும். இருப்பினும், அபத்தமான குற்றச்சாட்டுகளை கூறி மக்களை ஏமாற்றுவதை அனுமதிக்க முடியாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: