உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் நாளை திறந்து வைப்பு – ஜனாதிபதி ரணில் அழைப்பு – ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி அதிகாரபூர்வமா இலங்கை வருகை!

Tuesday, April 23rd, 2024

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை நாளை ஏப்ரல் 24 திகதி புதன்கிழமை கூட்டாக திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டு வருகைதரவுள்ளார் என வெளிவிவகார அமைச்சின் தெரிவித்துள்ளது.

ஈரானின் நிதியுதவின் கீழ் அமைக்கப்பட்டுள்ள உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக இலங்கையின் தேசிய மின்கட்டமைப்பில் 120 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து சேர்க்கப்படவுள்ளது.

அத்துடன் இத்திட்டம் இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சுமார் 25,000 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை நிலப்பரப்புக்கு நீர்ப்பாசனத்தை வழங்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஈரானிய ஜனாதிபதி தற்போது மூன்று நாள் பயணமாக அண்டை நாடான பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட விரிசலை சீர்செய்வதற்காக இரு நாடுகளும் மேற்கொண்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த பயணம் அமைந்துள்ளது.

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, நேற்று ஏப்ரல் 22 ஆம் திகதி திங்கட்கிழமை  இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் பிரதம மந்திரி ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் பேச்சுகள் நடத்தினார். பாகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு ரைசி இலங்கை வரவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில், ரைசி கொழும்பிற்கு ஒரு நாள் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரு ஜனாதிபதிகளும் தனிப்பட்ட சந்திப்பை நடத்துவதற்கும், உமா ஓயா என பெயரிடப்பட்ட பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்கும் திட்டமிட்டுள்ளனர்.

529 மில்லியன் டொலர் மதிப்பில் ஈரானிய நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட மற்றும் உருவாக்கப்பட்ட இந்த திட்டம் முதலில் 2015 இல் முடிக்க உத்தேசிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் மற்றும் பல சிக்கல்கள் காரணமாக பல முறை இடைநிறுத்தப்பட்டு தற்போது இறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் ஈரான் ஜனாதிபதியின் இந்தப் பயணம் அமைந்துள்ளதால் அமெரிக்கா ஏற்கனவே, ரைசியின் பயணம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் கவலையை வெளிப்படுத்தியிருந்ததுடன், இராஜதந்திர ரீதியான அழுத்தங்களையும் கொடுத்திருந்தது.

என்றாலும், இந்த எதிர்ப்புகளை மீறி ஈரான் ஜனாதிபதியின் பயணத்துக்கு இலங்கை ஒழுங்கமைப்புகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் ஈரான் ஜனாதிபதியின் இலங்கை பயணத்தின் பின் கடுமையான இராஜதந்திர நெருக்கடிகளை சந்திக்கும் நிலையை இலங்கை எதிர்கொள்ளலாம் என அரசியல் ஆய்வாளர்கள் எதிர்வு கூறுகின்றனர்.

இதேவேளை ஈரானிய ஜனாதிபதி இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடற்பாதுகாப்பு, முதலீடுகள், இருநாடுகளின் நட்புறவு உள்ளிட்ட விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நாளை (24) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது, இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் 5 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் வருகைக்காக அதியுச்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

மத்தளையிலிருந்து உமாஓவா வரையிலும் கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு வரையான 172 கிலோமீற்றர் தரைவழியான பயணத்திற்கு இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருடன் பலத்த பாதுகாப்பை நிலைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று பாகிஸ்தானுக்கு விஜயம் செய்த ஈரான் ஜனாதிபதி, இன்றுகாலை மத்தளை விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடைகின்றார்

அங்கிருந்து தரை மார்க்கமாக 141 கிலோமீற்றர் தூரம் சென்று உமாஓயா திட்டத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

அங்கிருந்து மீண்டும் மத்தளைக்கு வந்து விசேட விமானம் மூலம் மத்தளையில் இருந்து கட்டுநாயக்கவிற்கு செல்லவுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 31 கிலோமீற்றர் தொலைவில் கொழும்பு சென்றடைந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன் பின்னர் தரைவழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் திரும்பும் ஈரான் ஜனாதிபதி, நாளையதினமே நாட்டை விட்டு வெளியேறவுள்ளார்.

ஈரானிய ஜனாதிபதி மற்றும் முப்படையினரின் பாதுகாப்பை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் வழங்குவார்கள் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts:

புத்தாண்டின் வரவு புதுப் பொலிவை தரவேண்டும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் V.K.ஜெகன்!
சைவ சமயத்திற்கு எதிரான அநீதிகளை தென்னிலங்கை அரசியல்வாதிகள் தடுக்க வேண்டும் - நல்லை ஆதீன முதல்வர் கோர...
சத்தியமூர்த்தி நியமனம் - மாகாணசபை அதிகாரத்தை மத்திக்கு தாரைவார்க்கும் செயற்பாடு – வடக்கின் முன்னாள் ...