இலாபமீட்டும் துறையாக கடற்றொழில் மாறிவருகிறது – பிரதமர் தினேஸ் குணவர்தன!

Tuesday, May 9th, 2023


கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில் செயற்பட்டு வருகின்ற சீநோர் நிறுவனத்தின் 55 ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்று(08.05.2023) சிறப்பாக இடம்பெற்றது

இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன,

நஷ்டத்தில் இயங்கிவந்த கடற்றொழில் துறை இலாபமீட்டும் துறையாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தொடர்ச்சியான முயற்சி காரணமாக மாற்றியமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், நோர்வே அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட சீநோர் நிறுவனமானது மரத்தினாலான படகுகளையே நிர்மாணித்து வந்ததாகவும். தனது தந்தையான பிலிப் குணவர்த்தனவின் காலத்தில் அதனை மாற்றி பிளாஸ்டிக் படகுகளை கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், ஐந்தாண்டு வேலைத்திட்டத்தில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி படகு கட்டுமானம் உட்பட சுற்றுலாத்துறை அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசு தேவையான ஒத்துழைப்பை வழங்கும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றுகையில், “1967ஆம் ஆண்டு காரைநகரில் சீநோர் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் மட்டக்குளி, வீரவில, லுனுவில பகுதிகளில் அதன் கிளைகள் விஸ்தரிக்கப்பட்டன என்று தெரிவித்ததுடன்,

காரைநகரில் சீநோர் நிறுவனத்தின் படகு கட்டும் தொழிற்சாலையின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்து செயற்றிறன்மிக்கதாக முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

சீநோர் நிறுவனத்தின் செயற்பாடுகளை விஸ்தரித்து, அதன் செயற்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதை எடுத்துச் செல்லும் நோக்கில், சீநோர் நிறுவனத்திற்கான இணையத்தளம் இந்நிகழ்வில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இவ்விழாவின்போது சீநோர் நிறுவனத்தில் 25 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிய 10 ஊழியர்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அமைச்சர் மனுஸ நாணயக்கார, கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்த்தன, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா உள்ளிட்ட பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். –

Related posts: