இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்!

Monday, January 9th, 2023

நாட்டின் ஏற்றுமதியினை மேம்படுத்தும் நோக்கில் இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையிலான 3 ஆம் கட்ட உத்தேச வர்த்தக பேச்சுவார்த்தை இன்று ஆரம்பமாகவுள்ளது.

7 துறைகள் தொடர்பில், இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, பண்ட வர்த்தகம், சேவை வர்த்தகம், முதலீடு, மூல விதிகள் சுங்க மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட ஏழு அம்சங்களின் கீழ் குறித்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக தாய்லாந்தின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் திணைக்கப் பணிப்பாளர் நாயகம் அவுரமோன் சுப்தாவிதும் தலைமையிலான 26 பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் நேற்று நாட்டை வந்தடைந்தனர்.

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்றும் நாளையும் கொழும்பில் நடைபெறவுள்ளது.

2021 ஆம் ஆண்டில், இலங்கையிலிருந்து தாய்லாந்திற்கான ஏற்றுமதி 59 மில்லியன் டொலர்களாகவும், தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கான இறக்குமதிகள் 355 மில்லியன் டொலர்களாகவும் இருந்தன.

தாய்லாந்திற்கு சாதகமான வர்த்தக சூழ்நிலை நிலவும் பின்னணியில் இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படுவதோடு, தாய்லாந்திற்கான பிரவேசம் மூலம் நமது ஏற்றுமதிகளை தாய்லாந்து சந்தைக்கு மட்டுமன்றி மற்றைய ஆசியான் சந்தைகளுக்கும் எமது ஏற்றுமதிகளுக்கான பிரவேசத்தை மேம்படுத்த முடியும்.

அத்துடன், தற்போதுள்ள வர்த்தகத்திற்கான வரி அல்லாத வர்த்தகத் தடைகளை குறைப்பது என்பன இந்த பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கமாக கருதப்படுகின்றது.

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை ௲ தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை அமுல்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

உள்நாட்டு வர்த்தக சபை மற்றும் கைத்தொழில் சங்கங்கள் முன்வைத்துள்ள குறிப்பிட்ட கோரிக்கைகள் குறித்து இந்தக் கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

000

Related posts: