இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிப்பு – யாழ்ப்பாணத்தில் அடுத்த நோயாளி இனங்காணப்பட்டார்!

Wednesday, April 1st, 2020


இலங்கையில் மேலும் மூன்று கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மருத்துவமனை செய்திக் குறிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதை அடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 146 உயர்ந்துள்ளது.
அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த மூவரும் முறையே மருதானை , யாழ்ப்பாணம் , குருநாகல் பகுதிகளில் இருந்து இந்த தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என தெரியவருகின்றது
தற்போது புதிதாக யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார் என அடையாளம் காணப்பட்டவர் ஒரு மத போதகர் எனவும் இவர் மானிப்பாயை சேர்ந்தவர் என்றும் தெரியவருகின்றது.
இதனிடையே யாழ்ப்பாணத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த சுவிஸ் நாட்டிலிருந்து அரியாலைப் பகுதிக்கு வருகைதந்து மத போதனை நிகழ்வை நடத்திய சுவிஸ் போதகரது நிகழ்வில் கலந்துகொண்டதாக அடையாளம் காணப்பட்டு காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த மதபோதகர் ஒருவருக்கே தற்போது இந் நோய் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த சுவிஸ் மதபோதகரது நிகழ்வில் கலந்துகொண்டதாக இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஏனையவர்களது மருத்துவப் பரிசோதனைகளும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இந்நிலையில் தற்போதைய நிலையில் நாட்டில் 146 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 18 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேபோல், 126 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: