இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருமானம் 26 சதவீதமாக அதிகரிப்பு – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Thursday, March 3rd, 2022

இலங்கையில் கடந்த வருடம் தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதி மூலம் 834 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் ஊடாக ஏற்றுமதி 26 சதவீதமாக அதிகரித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில் தென்னையுடன் தொடர்புடைய உற்பத்திகளான தேங்காய் உள்ளீடுகள் , தென்னை நார் உற்றபத்திகள், தென்னை மட்டைகள் உற்பத்திகள் மூலம் 661 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்ததாக இலங்கை சுங்க திணைக்களத்தின் நேற்றையதினம் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

உலக அளவில் உள்ளூர் தேங்காய் சார்ந்த பொருட்களுக்கு பாரிய அளவில் கேள்வி உள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுருந்தார்.

2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தேங்காய் உள்ளீடுகளின் ஏற்றுமதி 37 சதவீதமும், நார் உற்பத்தி சார்ந்த பொருட்கள் 9 சதவீதமும் , தென்னை மட்டைகள் சார்ந்த உற்பத்திகள் 42 சதவீதமும் அதிகரித்துள்ளது.

பெருந்தோட்ட அமைச்சரினால் தங்காலையில் அதியுயர் கலப்பின தென்னை உற்பத்தி நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் 2023ஆம் ஆண்டுக்குள் 2 மில்லியன் உயர் விளைச்சலை தரக்கூடிய ஹைபிரிட் தென்னை நாற்றுகளை உற்பத்தி செய்வதாகும்.

‘நாம் தென்னை உற்பத்திகளை அதிகரித்து தேங்காய்களை ஏற்றுமதி செய்தால் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலரை சம்பாதிக்க முடியுமென’ பெருந்தொட்ட அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் தேயிலைக்கு அடுத்தபடியாக தென்னை உற்பத்திகளே பயிரிடப்படுகின்றன. இலங்கையில் வருடாந்தம் 3 பில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுவதுடன் 2 பில்லியன் தேங்காய்கள் உள்ளூர் தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது.

தென்னை உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்கில் ‘தென்னை வீட்டுத்தோட்டம்’ என்ற கருத்திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் 2 தென்னங்கன்றுகள் வீதம் வழங்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts: