இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் எதிர்வரும் 1 ஆம் திகதி வரலாற்றுச் சிறப்பு மிக்க செல்வச்சந்நிதி தேர்த் திருவிழா !

Wednesday, August 26th, 2020

வரலாற்றுச் சிறப்பமிக்க தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் செப்ரெம்பர் மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ளது.

அத்துடன் ஆலயத்துக்கு வருகைதரும் அடியவர்கள், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, சமூக இடைவெளியை பேணுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்றிலிருந்து அடியவர்களை பாதுகாக்கும் வகையில், இக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலகம் உற்சவகாலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளது.

அந்தவகையில் சுகாதாரதுறையினரின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் உற்சவகாலத்தில் 150 அடியவர்கள் மாத்திரம் வழிபாடு செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

அடியவர்கள் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தை எடுத்துவருதல் கட்டாயமானதாகும். இவை வீதித் தடைகளில் ஒவ்வொரு தடவையும் பதிவு செய்யப்படும். முகக்கவசங்களை அணிந்திருந்தல் கட்டாயமானதாகும். சமூக இடைவெளியை அடியவர்கள் பின்பற்ற வேண்டும்.

கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டவர்கள், சுய தனிமைப்படுத்தப்பட்டவர்கள், தனிமைப்படுத்தலை நிறைவு செய்தமைக்கான ஆவணத்தை தம்வசம் வைத்திருக்க வேண்டும். காய்ச்சல், தடிமல், தும்மல், இருமல் உள்ளவர்கள் ஆலயத்துக்கு வருவதை தவிர்க்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்  தாகசாந்தி, அன்னதானம் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அங்கப்பிரதட்சணம், அடி அழித்தல், கற்பூர சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே திருவிழாக் காலங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளின் போது 20 நபர்களுக்கு மாத்திரம் அனுமதி. விசேட போக்குவரத்துச் சேவை இம்முறை இடம்பெறமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: